விடுபட்ட ஆதார் திருத்தப்பணி; முகாம் நடத்த கோரிக்கை
உடுமலை : அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு விடுபட்ட ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை மாணவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.மாணவர்களின் ஆதார் எண்கள் பலவும், பயோமெட்ரிக் பதிவு அப்டேட் செய்யப்படாமல் இருப்பதால், வங்கிக்கணக்குகளில் உதவித்தொகை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் மட்டுமே, உதவித்தொகை செலுத்தப்படுகிறது.இதனால் மாணவர்களின் ஆதார் பதிவுகள் புதுப்பிக்க சிறப்பு முகாம்,ஜூன், ஜூலை மாதங்களில் நடந்தது. முதற்கட்டமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 வகுப்பு மாணவர்களின் பயோமெட்ரிக் பதிவுகள் புதுப்பித்தல், ஆதார் பதிவில் உள்ள மொபைல் எண்கள், முகவரி சரிபார்த்தல் பணிகளும், அதை தொடர்ந்து துவக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கான பதிவுகளும் முகாமில் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் ஆதார் பணிகளுக்கு, பணியாளர்கள் பற்றாக்குறை காரணத்தால், 70 சதவீதம் மட்டுமே பள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. பள்ளிகளில் முகாம் நடத்துவதால் மட்டுமே, பெற்றோர் ஆதார் பதிவுகளை முழுமையாக மேற்கொண்டுள்ளனர்.இதனால் விடுபட்ட மாணவர்களுக்கு, ஆதார் திருத்தம் செய்வதற்குசிறப்பு முகாம் நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.