உடுமலை;திருப்பூரில் இருந்து திருமூர்த்திமலைக்கு இயக்கப்படும் பஸ் குறித்த தெளிவான அறிவிப்பை, போக்குவரத்துக்கழகம் வெளியிட பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூரில் இருந்து உடுமலைக்கு, 15 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. அதேநேரம், உடுமலையில் இருந்து மூணார், திருமூர்த்திமலை செல்ல குறைந்தளவே பஸ் இயக்கப்படுகிறது.குறிப்பாக, போக்குவரத்து கழக கோவை கோட்டம் சார்பில், திருப்பூரில் இருந்து மூணார் திருமூர்த்திமலைக்கு நேரடியாக பஸ் இயக்கப்படுகிறது.தினமும் காலை, 10:00 மணிக்கு, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் இயங்குவது பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை; பஸ் ஸ்டாண்டில், எந்த விதமான அறிவிப்பு பலகையும் இல்லை.இதனால், பஸ் இயங்கியும், கலெக் ஷன் இல்லாமல் உள்ளது. இதேநிலை உடுமலையில் பஸ் ஸ்டாண்டிலும் நிலவுகிறது.பயணியர் கூறியதாவது: திருப்பூரில் இருந்து நேரடியாக மூணாறு மற்றும் திருமூர்த்திமலைக்கு இயக்கப்படும் பஸ் குறித்த விபரத்தை, அறிவிப்பாக இடம்பெறச் செய்ய வேண்டும்.இதேபோல, கோவை, நீலகிரி, ஈரோடு என, வட மாவட்டங்களில் இருந்து, மூணாறு செல்ல விரும்பும் பயணியர், உடுமலை மார்க்கமாக செல்கின்றனர்.இதனால், உடுமலையில் இருந்து புறப்படும் பஸ்கள் குறித்த விபரத்தை, பயணியர் அறிந்து கொள்ளும் வகையில், இடம்பெறச் செய்ய வேண்டும். பஸ் இயக்கப்படும் நேரம் தெரியாமல் பயணிகள், பல்வேறு சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.