கோவில் கட்டடத்தில் மரம்; விரிசல் ஏற்படும் அபாயம்
பல்லடம்; பல்லடம், அக்ரஹார வீதியில், காளிங்கநர்த்தன வேணுகோபால கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள இக்கோவில் போதிய பராமரிப்புகள் இன்றி உள்ளது. கோவிலைச் சுற்றி புதர்கள் மண்டி உள்ளன. கோவில் கட்டடத்தின் மேல் பகுதியில் ஆலமரம் வேரூன்றி வளர்ந்து வருகிறது. கட்டடத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆலமரம் நாளுக்கு நாள் வளர்ந்து பெரிதாகி வரும் நிலையில், இதனை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே, கட்டடத்தை பாதிக்கும் மரத்தை அகற்றுவதுடன், கோவில் மற்றும் கோவிலை சுற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.