ஓடையை ஆக்கிரமித்து பாதை; பொதுமக்கள் அதிர்ச்சி
திருப்பூர்; திருமுருகன்பூண்டி, 'ராக்கியாபாளையம் பகுதி யில், ஓடையை ஆக்கிரமித்து, பாதை அமைக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர்' என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட ராக்கியாபாளையத்தில் ஓடை செல்கிறது. மழையின் போது, ஓடையில் நீர் வழிந்தோடும். இந்த ஓடை தற்போது தனியார் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பாதை அமைக்கப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அப்பகுதி மக்கள் கூறியதாவது: பூண்டியில் நிலத்தடி நீர் வளத்தை பெருக்கும் ஒரே நீராதாரம் ராசாத்தாள் குளம். சில ஆண்டுகளுக்கு முன் புதர்மண்டி கிடந்த இக்குளம், தன்னார்வ அமைப்பினரால் சில லட்சங்கள் செலவழிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. பின், அங்கு மழைநீர் தேங்கி நிற்க துவங்கியது; தற்போது, அப்பகுதி முழுக்க பசுமை சூழ்ந்துள்ளது. சொர்ணபுரி ரிச் லேண்ட் வழியாக வழிந் தோடி வரும் ஓடையின் வழியாகத்தான், குளத் தில் மழைநீர் சங்கமிக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிலர் ஓடையை சுருக்கி, அதன் ஓரத்தில் மண் கொட்டி, 'பொக்லைன்' உதவியுடன் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'நீர் நிலையை ஆக்கிரமிக்க கூடாது; நீர்நிலையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என, ஐகோர்ட் உத்தரவிட்டு, பல இடங்களில் அது, நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், யாருடைய அனுமதியின் பேரில், ஓடையை ஆக் கிரமித்து பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து, பணி மேற் கொள்வோரிடம் விளக்கம் கேட்டாலும், அவர்கள் தெளிவான விளக்கம் தர மறுக்கின்றனர். எனவே, பூண்டி நகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு இவ்விவகாரத்தை கொண்டு செல்லவுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.