குழாய் உடைப்பால் வெள்ளக்காடான ரோடு :பல்லடத்தில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பல்லடம்: பல்லடம் - -பொள்ளாச்சி நெடுஞ்சாலை, பொள்ளாச்சி, உடுமலை வழியாக கேரள மாநிலத்தை இணைக்கிறது. வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், குழாய் உடைப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. நேற்று, வடுகபாளையம் பகுதியில், திடீரென, ரோட்டில் பிளவு ஏற்பட்டு, அதிலிருந்து, குடிநீர் பெருக்கெடுத்து ரோடு முழுவதும் வழிந்தோடியது. கன மழை பெய்து நின்றதுபோல், ரோடு முழுவதும் வெள்ளக்காடாக இருந்தது. வாகன ஓட்டிகள் அதில் தத்தளித்தபடி சென்றனர். இதற்கிடையே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குடிநீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். பொதுமக்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி ரோடு, வடுகபாளையம் பகுதியில், ஏற்கனவே இரண்டு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சமீபத்தில் தான் சரி செய்யப்பட்டது. தற்போது, மூன்றாவது இடமாக, மற்றொரு இடத்தில், குழாய் உடைப்பு ஏற்பட்டு, ரோடும் பிளவுபட்டுள்ளது. ஏற்கனவே குழாய் உடைப்பு ஏற்பட்டு தோண்டப்பட்ட இடங்கள், சரிவர மூடப்படாமல், கரட முரடாக உள்ளன. இச்சூழலில், மீண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பொள்ளாச்சி ரோடுபலத்த சேதமடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், ரோட்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும். எனவே, குழாய் உடைப்பு ஏற்படாமல், குடிநீர் வீணாகாமலும் இருப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.