சாலையோர ஆக்கிரமிப்புகள்; சிக்கல்கள் என்ன?
திருப்பூர்: பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் பராமரிப்பில் உள்ள ரோடுகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் விரிவுபடுத்தப்படுகின்றன. அதே நேரம், ரோட்டோர ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. தினம், தினம், புதிது புதிதாக சாலையோர கடைகள் முளைக்கின்றன. போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுவதும் தினசரி நிகழ்வாகிவிட்டது. தொடரும் மோதல் போக்கு உதாரணமாக, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் துவங்கி, பழைய பஸ் ஸ்டாண்ட், சூளை வரை ரோட்டோர ஆக்கிரமிப்பு என்பது, குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பெருகிவிட்டது. குறிப்பாக, தாலுகா அலுவலக ரோட்டோரம் கடந்த, 7 ஆண்டுகள் முன்பு வரை, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில், ஓரிரு கடைகள் மட்டுமே இருந்தன. தற்போது, அடிக்கு அடி கடைகள் முளைத்து விட்டன. இதனால், தொழில் வரி, மின் கட்டணம், ஜி.எஸ்.டி., என, பலவகை வரி செலுத்தி கடை நடத்தும் வியாபாரிகளுக்கும், அத்தகைய செலவினம் எதுவுமில்லாத சாலையோர வியாபாரிகளுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை வெடித்து வருகிறது. அவிநாசி மட்டுமின்றி, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இத்தகைய பிரச்னை உருவாகிறது. மீறப்படும் விதிமுறைகள் மத்திய, மாநில அரசுகள் தகுதியுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, அவர்களுக்கு வங்கிக்கடன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க வழிவகை செய்கின்றன. அந்த அடிப்படையில், அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகத்தினர் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து, ஒவ்வொருவரது வீடுகளுக்கும் சென்று, அவர்களது வாழ்வியல் சூழல், பொருளாதார நிலையை அறிய வேண்டும். சாலையோர கடைகளை மட்டும் நம்பித்தான் அவர்களது வாழ்வாதாரம் உள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டால், விதிமுறைக்கு உட்பட்டு, இடையூறு இல்லாத இடங்களில் கடை வைக்க அனுமதி வழங்கலாம். மற்றவர்களுக்கு, விதிகளை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கலாம். சாலையோர கடைகளை முறைப்படுத்த நிறைய வழிகள் இருக்கின்றன; அரசியல் நெருக்கடி, ஓட்டு அரசியல் உள்ளிட்ட பல காரணங்களால், அவற்றை நடைமுறைப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் தடுமாறுகின்றன; இதுதான், பிரச்னைக்கு காரணம். இவ்வாறு, அவர்கள் கூறினர். நாள் முழுக்க: சாலையோர கடைகள்: நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது: சாலையோர கடைகளை மட்டுமே நம்பி, தங்கள் வாழ்வாதாரத்தை கட்டமைத்துள்ளவர்களுக்கு தான், சாலையோரம் கடை வைக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதுவும், வாகன நெரிசல் அதிகமுள்ள இடங்களில், காலை, மாலையில் குறிப்பிட்ட நேரமும், சில இடங்களில் நாள் முழுதும் கடை வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின், கடைகளை முழுவதும் காலி செய்து விட்டு செல்ல வேண்டும் என்பது தான், சாலையோர கடை அமைப்பதற்கான நடைமுறை விதி.ஆனால், சாலையோரம் கடை விரிக்கும் பலர், கூடாரம் அமைப்பது, தங்கள் வியாபார பொருட்களை அங்கேயே இருப்பு வைத்து செல்வது; நிரந்தர கடையாகவே கருதுவது; வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடையை விஸ்தரிப்பது செய்வது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். ஆயத்த ஆடை, பேன்ஸி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்வோர், சம்பளத்துக்கு ஆள் வைத்து, வார விடுமுறை நாட்களில் சாலையில் கட்டில் விரித்து கடை அமைக்கின்றனர். இதுபோன்ற செயல்கள் தான் பிரச்னை ஏற்பட காரணமாகிறது.