உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அழிந்து வரும் ரோட்டோர மரங்கள்; கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை

அழிந்து வரும் ரோட்டோர மரங்கள்; கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை

உடுமலை; ரோட்டோரங்களில், பல்வேறு காரணங்களால் மரங்கள் காய்வதை தடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாநில நெடுஞ்சாலைத்துறை உடுமலை, மடத்துக்குளம் உட்கோட்டம் சார்பில், மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை மற்றும் மாவட்ட இதர ரோடுகளில், சில ஆண்டுகளுக்கு முன் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. முன்பு, இம்மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற, நெடுஞ்சாலைத்துறை நிதி பயன்படுத்தப்பட்டது. டிராக்டர்கள் வாயிலாக தண்ணீர் விட்டு, மரக்கன்றுகளை சுற்றிலும், முள் தடுப்புகள் அமைக்கப்பட்டன. உடுமலை --- பல்லடம், பொள்ளாச்சி --- தாராபுரம், உடுமலை --- தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகள், உடுமலை - - குமரலிங்கம், உடுமலை -- திருமூர்த்திமலை, அமராவதிநகர் ஆகிய மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு மாவட்ட இதர சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டன. தற்போது மரக்கன்றுகள் பராமரிப்பை, நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்வதில்லை. மரங்களில் ஆணியடித்து விளம்பர பலகைகள் மாட்டுவது அதிகரித்துள்ளது. இதனால் மரங்கள் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி கருகி விடுகின்றன. மேலும் ரோட்டின் இருபுறங்களிலும் குப்பையை குவித்து தீ வைத்து எரிக்கின்றனர். வெப்பத்தால் மரங்கள் கருகுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. சில ரோடுகளில் மரங்கள் இருந்த சுவடே இல்லாமல் அழிந்து வருகிறது. ரோட்டோர மரங்களை பாதுகாக்கவும் புதிதாக மரக்கன்று நடவு செய்யவும் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி