ரவுடிக்கு அரிவாள் வெட்டு; திருப்பூரில் பயங்கரம்
திருப்பூர்; திருப்பூரில் நேற்று ரவுடி ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார்.தேனி மாவட்டம், மஞ்சலாறை சேர்ந்தவர் ராஜேஷ், 38; ரவுடி; இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று வழக்கு ஒன்றில் திருப்பூர் கோர்ட்டில் ஆஜரானார். ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பகுதியில் நேற்று இரவு ராஜேஷ், சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் நான்கு பேர் கொண்ட கும்பல், ராஜேைஷ அரிவாளால் வெட்டிவிட்டு, வாடகை காரில் தப்பியது. நான்கு வெட்டுகளுடன் படுகாயமடைந்த ராஜேைஷ மீட்டு, அரசு மருத்துவமனையில், வடக்கு போலீசார் சேர்த்தனர்.போலீசார் கூறியதாவது:ராஜேஷூக்கும், தேனியை சேர்ந்த நாய் பாஸ்கர் என்பவருக்கும் இடையே 'யார் பெரிய ஆளு' என்பதில் முன்விரோதம் இருந்தது. திருப்பூரில் தங்கியிருந்த இவர்கள், பிரச்னை காரணமாக தேனிக்கு திரும்பி விட்டனர். சமாதானம் பேச, திருப்பூர் வந்த ராஜேஷை, நாய் பாஸ்கர் தரப்பினர் நேரில் அழைத்தனர். அப்போதுதான் ராஜேஷ் வெட்டப்பட்டுள்ளார். தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். நாய் பாஸ்கர் மீது, ஏராளமான வழக்குகள் உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர். 4வது நாளாக கொடூரம்
திருப்பூர் மாவட்டத்தில் நான்காவது நாளாக பயங்கர சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த அக்., 29ம் தேதி, பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய மூவர் கொல்லப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கணியாம்பூண்டி பகுதியில் கடந்த அக்., 30ல் தாயைக் கொன்று மகன் தற்கொலை செய்துகொண்டார். நேற்றுமுன்தினம் அவிநாசியில் வாக்கிங் சென்ற நபர் கொல்லப்பட்டார். நேற்று திருப்பூரில் அரிவாள் வெட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ள அதேசமயம், போலீசாரோ குற்றவாளிகளைக் கண்டறிய இயலாமல் திணறி வருகின்றனர்.