தியாகத்தால் உருவான ஆர்.எஸ்.எஸ்., காமாட்சிதாச சுவாமிகள் பேச்சு
பல்லடம்:''பலரின் தியாகத்தால் உருவானது தான் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம்,'' என, அவிநாசி, திருப்புக்கொளியூர் ஆதினம் ஸ்ரீகாமாட்சி தாச சுவாமிகள் பேசினார். பல்லடம் அடுத்த, சுக்கம்பாளையத்தில், ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா கூட்டம் நடந்தது. 'வனம்' அமைப்பின் இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். அவிநாசி, திருப்புக்கொளியூர் ஆதினம், வாகீசர் மடாலயம் ஸ்ரீகாமாட்சிதாச சுவாமிகள் பேசியதாவது: இன்று, நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பரந்து விரிந்து இயங்கி வருகிறது. எத்தனையோ பேர் எவ்வளவோ சிரமங்கள், இன்னல்கள், அடக்குமுறைகளை அனுபவித்து தான் இப்படி ஒருமாபெரும் இயக்கத்தை உருவாக்கியுள்ளனர். சத்தியம், நேர்மை, தர்மம், உண்மை, தியாகம் இவற்றால் உருவானது தான் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும், சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகளால் அவை நீண்ட காலம் செயல்படுவதில்லை. ஒழுக்கம், ஒருங்கிணைப்பு, கட்டுப்பாடு, தனித்தன்மை, தேசபக்தி, ஒற்றுமை ஆகியவற்றால் உருவான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுள்ளது. பலரும் சிரமப்பட்டு உருவாக்கிய இந்த இயக்கத்துக்காக, நாம் செய்வதெல்லாம், எதிர்கால சந்ததிகளான குழந்தைகளை இந்த இயக்கத்தில் இணைத்து, ஒழுக்கம், தேசபக்தியை கற்பிக்க அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.