மேலும் செய்திகள்
கூடுதல் பஸ் இயக்கணும்
29-Oct-2024
உடுமலை; விடுமுறை நாட்களில், உடுமலையில் இருந்து கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதில்லை; இதனால், பயணியர் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.கோவை - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் உடுமலை நகரம் அமைந்துள்ளது. உடுமலை வழியாக, திண்டுக்கல், மதுரை, பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு போதிய இடைவெளியில், தொலைதுார பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஆனால், உடுமலையில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவைக்கு குறைந்தளவு பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால், விடுமுறை நாட்களில், உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவைக்கு செல்பவர்களின் நிலை திண்டாட்டமாகி விடுகிறது.மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வரும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதால், உடுமலை பஸ் ஸ்டாண்டில் பயணியர் ஏற முடிவதில்லை. குறிப்பாக, பண்டிகை விடுமுறை நாட்களில் கோவைக்கு செல்ல, உடுமலை பஸ் ஸ்டாண்டில், ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.உடுமலையில் இருந்து கோவையிலுள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர்.பயணியர் கூறியதாவது: உடுமலையில் இருந்து கோவைக்கு குறைந்தளவு பஸ்களே இயக்கப்படுகின்றன. தொலைதுார பஸ்களில் அதிக கூட்டம் காரணமாக ஏற முடிவதில்லை. குழந்தைகள், முதியவர்கள் பொள்ளாச்சி சென்று அங்கிருந்து பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளது.உடுமலை - பல்லடம் - கோவை வழித்தடத்திலும் போதிய பஸ்கள் இல்லை. கோவை வரை நின்றபடியும், படிகளில் தொங்கியபடியே பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம்.வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலத்திலும், உடுமலையில் இருந்து கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த வழித்தடத்தில், இரவு நேரங்களிலும் குறைவாகவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக, இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.
29-Oct-2024