உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சபரிமலை சீச ன் விற்பனை; கடைகள் தயார்

சபரிமலை சீச ன் விற்பனை; கடைகள் தயார்

திருப்பூர்: சபரிமலை சீசன், கார்த்திகை மாதம் துவங்குவதால், அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவதற்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக, திருப்பூரில் உள்ள கடைகள் தயாராகி வருகின்றன. கார்த்திகை மாதம் பிறந்ததும், அய்யப்ப பக்தர்களின் விரதம் துவங்குகிறது; ஒரு மண்டல காலம் விரதம் இருந்து, சபரிமலை சென்று அய்யப்பனை வழிபட்டு, விரதத்தை பூர்த்தி செய்வது வழக்கம். திருப்பூரில் இருந்து, கார்த்திகை, மார்கழி மாதங்களில், மாலை அணிந்து, பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை சென்று வருகின்றனர். குருசாமி கையால், துளசிமணி மாலை அணிந்து, விரதத்தை துவக்குவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. கார்த்திகை முதல் நாளில் இருந்து, அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து, கறுப்பு அல்லது நீலநிற வேட்டி அணிந்து, காலணி அணியாமல் கடுமையான விரதம் இருந்து, சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்கின்றனர். கார்த்திகை மாதம், நவ., 17ம் தேதி பிறக்கிறது; இரண்டு வாரமே இருப்பதால், திருப்பூரில் உள்ள பூஜை பொருட்கள் விற்கும் கடைகள், சபரிமலை சீசன் விற்பனைக்கு முழு வீச்சில் தயாராகிவருகின்றன. துளசிமணி மாலை, சந்தன மாலை, ருத்ராட்ச மாலைகள், அய்யப்ப சுவாமி படம் பொறித்த டாலர், கறுப்பு மற்றும் நீலநிற வேட்டி, துண்டு வகைகள் இருப்பு வைக்க துவங்கிவிட்டனர். இதுகுறித்து திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள கடை உரிமையாளர்கள் கூறுகையில், 'சபரிமலை சீசன் விற்பனை, கார்த்திகை 1 ம் தேதி துவங்கி, மார்கழி கடைசி வாரம் வரை நடக்கும். அதற்காக, 54 மணி, 108 மணி என இரண்டு வகை துளசிமணி மாலைகள் தருவிக்கப்பட்டுள்ளன. சந்தனமாலையுடன், ருத்ராட்ச மாலை அணிவதும் அதிகரித்து வருகிறது. அதேபோல், வேட்டி, துண்டுகளும், 200 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை, ஆறு வகையான ரகங்களில் விற்பனைக்கு தயாராக உள்ளது. இருமுடி பைகள், ஜோல்னா பை, இருமுடிக்கு தேவையான பொருட்கள் 'செட்' தயாராக இருக்கிறது. வழக்கமாக, ஐப்பசி 25ம் தேதிக்கு பிறகே விற்பனை துவங்கும்; இருப்பினும், முன்கூட்டியே தயார்நிலையில் இருக்கிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ