உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்கூட்டர் வாங்க வந்த மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்

ஸ்கூட்டர் வாங்க வந்த மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்

இரண்டு ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருந்தனர்; அந்த நாளும் வந்தது; மாற்றுத்திறனாளிகள் 38 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது; இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை பெறுவதற்காக, கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு, கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமை தாங்கினார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினர். மொத்தம், 38 பயனாளிகளுக்கு, தலா, ஒரு லட்சத்து, 1 ஆயிரத்து, 790 ரூபாய் மதிப்புள்ள, ஸ்கூட்டர் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பயனாளிகளிடம் இதற்காக கையெழுத்து பெறப்பட்டது. இன்னும் எட்டு பேருக்கு ஸ்கூட்டர் வரவில்லை என்பது அப்போதுதான் தெரிந்தது; ஸ்கூட்டர் பெற முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். என்னதான் நடந்தது? ஒரு மாதம் முன்பாக, 'டூ வீலர்' ஏஜன்சி மூலம்விசாரித்து, பயனாளிகளுக்கான 'ஸ்கூட்டர்' ஆர்.சி., புக் வழங்கப்பட்டது. இதனால், ஆர்.சி., புக் கார்டுடன், பயனாளிகள் வந்திருந்தனர். விழா துவங்கும் முன்னதாக, பதிவேட்டில் கையொப்பம் பெற்று, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணிகள் முடிக்கப்பட்டன. அமைச்சர்கள், மேயர் தினேஷ்குமார், மண்டல தலைவர் பத்மநாபன் உள்ளிட்டோர் வந்ததும், ஸ்கூட்டர் மீது பயனாளிகள் அமர்ந்த நிலையில், போட்டோ எடுக்கப்பட்டது. பிறகுதான் எட்டு பேருக்கு இன்னும் ஸ்கூட்டர் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 'இரண்டு அல்லது மூன்று வாகனங்களுக்கு மட்டும், இன்றே 'பேட்டரி' பொருத்தி கொடுக்கப்படும். மற்றவர்களுக்கு 26ம் தேதிக்குள் வழங்கப்படும். பயனாளிகள் நேரடியாக ஏஜன்சிக்கு வந்து, வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்,' என்று, சம்பந்தப்பட்ட வாகன ஏஜன்சி அலுவலர்கள் தெரிவித்தனர். 'நாங்கள் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் இருந்து வந்துள்ளோம். எங்களுக்கு இன்றே ஸ்கூட்டர் வழங்க வேண்டும்,' என்று வாகனம் கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் கோரினர். அவர்களை மட்டும், ஏஜன்சி அலுவலகம் வருமாறு கூறினர். அவசர கோலத்தில் செய்யப்படும் நிகழ்ச்சி ஏற்பாடுகள், பயனாளிகளையே அதிருப்தியடையச் செய்யுமானால் எதற்காக நிகழ்ச்சி? ஸ்கூட்டர் வந்ததும் பயனாளிகளை வாங்கிக்கொள்ள செய்யலாம் அல்லவா! - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி