பின்னலாடை வாங்கி மோசடி; சேலத்தை சேர்ந்தவர் கைது
திருப்பூர்; திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களிடம், ஆடை கொள்முதல் செய்து, இரண்டு கோடி ரூபாய் வரை கொடுக்காமல் ஏமாற்றிய நபரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். சேலம் பகுதியை சேர்ந்த சில வியாபாரிகள், திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களிடம், ஆடைகளை வாங்கி, முழுவதும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருவதும் அதிகரித்துள்ளது. துவக்கத்தில், சரியாக வரவு செலவு செய்கின்றனர். அதன்பின், ஆடைகளுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர். இதுதொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், கடந்த நவ., மாதம், திருப்பூர் உற்பத்தியாளர்களை ஏமாற்றி வந்த சேலத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய சேலம், கொண்டலாம்பட்டி, கரட்டூரை சேர்ந்த சீனிவாசன், 39 என்பவர், 31 உற்பத்தியாளர்களிடம், ஆடை கொள்முதல் செய்து இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது தெரிந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று சீனிவாசனைகைது செய்தனர்.