மாடுகளுக்கான அலங்கார கயிறு சலங்கை மணி விற்பனை சுறுசுறு ; இது உற்சாகம்
திருப்பூர்; நாளை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பூரில் நேற்று கூடிய கால்நடை சந்தையில், மாடுகளுக்கு தேவையான அலங்கார கயிறு, மணி விற்பனை சுறுசுறுப்பாக நடந்தது.திருப்பூர், கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் திங்கள் தோறும் கால்நடைச்சந்தை நடக்கிறது. திருப்பூர் மட்டுமின்றி, கரூர், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும், மாடு, எருது, கன்றுகுட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மாடுகளை வாங்க, 2,000த்துக்கும் அதிகமாக விவசாயிகள், வியாபாரிகள் வருகின்றனர்.நாளை மாட்டுப்பொங்கல் என்பதால், நேற்று கூடிய சந்தையில் மாடுகளுக்கு தேவையான கயிறு, அலங்கார பொருட்கள், மணிகள் விற்பனை சுறுசுறுப்பாகியது. மாடுகள் கழுத்தில் கட்டும் தல கயிறு மற்றும் தும்பு கயிறு, கம்பளி (கருப்பு) கயிறு விற்பனை அதிகமானது. குறைந்தபட்சம் பத்து ரூபாய் துவங்கி, தரமான கயிறுகள், 30 ரூபாய் முதல், 60 ரூபாய் விற்கப்பட்டது. அலங்கார சலங்கை மணி, 25 முதல், 50 ரூபாய் வரை விற்கப்பட்டது.கயிறு விற்பனையாளர் மூலனுார் பாலு கூறுகையில், 'ஆண்டு முழுதும் தங்கள் விளைநிலங்களுக்கு பாடுபடும் மாடுகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் விழா, மாட்டுப்பொங்கல். மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, புதிய கயிறுகளை மாற்றி, மணிகளை அலங்கரித்து தெய்வமாக வணங்குவர். இதற்காக தல கயிறு, கம்பளி கயிறு மாற்றுவது பாரம்பரிய வழக்கம். இதனால், நேற்று வழக்கத்தை விட அதிகமான கயிறுகள் விற்பனை நடந்தது. மாட்டுப் பொங்கல் பூஜையில், வழிபாட்டுக்கு முன்பாக, புதிய சலங்கை மணி கட்டி, 'கல கலனு' ஆட்டத்துடன் மாடுகள், கன்றுகுட்டிகள் நடந்து வருவதே அழகு தான்,' என்றார்.களை கட்டிய விற்பனைநேற்று மாட்டுச்சந்தைக்கு, 785 கால்நடைகள் வரத்தாக இருந்தது. கன்றுகுட்டி அதிகபட்சமாக, 5,000 ரூபாய்க்கு விற்றது. காளை மாடு, 34 முதல், 39 ஆயிரம், எருமை, 26 ஆயிரத்து, 500 முதல் 31 ஆயிரம், பசு மாடு, 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை விற்கப்பட்டது. புத்தாண்டுக்கு பின் கடந்த வாரம் வரத்து சற்று குறைந்திருந்தாலும், நடப்பு வாரம் இயல்புக்கு திரும்பியது. கேரளாவில் இருந்து மாடுகளை வாங்க அதிகளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்; 1.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.