உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊதியம் இல்லாமல் துாய்மை பணியாளர்கள் பாதிப்பு; பணிக்கு வர மறுப்பு

ஊதியம் இல்லாமல் துாய்மை பணியாளர்கள் பாதிப்பு; பணிக்கு வர மறுப்பு

உடுமலை; உடுமலை கோட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில், துாய்மைப்பணியாளர்களுக்கான ஊதியம் பல மாதங்களாக வழங்கப்படாததால், பணியாளர்கள் பணிக்கு வர மறுக்கின்றனர். கிராமப்புற அரசுப்பள்ளிகளில் சுகாதாரம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு, தீர்வாக மத்திய அரசின் துாய்மை பாரத திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக, தற்காலிக துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இப்பணியாளர்களுக்கு துவக்கப்பள்ளியில் ஊதியமாக, 750 ரூபாய், நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் ரூபாய், உயர்நிலைப்பள்ளி பணியாளர்களுக்கு, 1,500 ரூபாய், மேல்நிலைப்பள்ளிக்கு 2,000 ரூபாய் என அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. மூன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது, பல மாதங்களாக ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளதால், பணியாளர்கள் வேதனை தெரிவிப்பதோடு, பணிக்கு வருவதற்கும் மறுத்து வருகின்றனர். உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், பெரும்பான்மையான பள்ளிகளில் துாய்மை பணியாளர்களுக்கு அரசு நிதியுடன் கூடுதலாக ஆசிரியர்களும் ஊதியம் வழங்கி வருகின்றனர். இறுதியாக கடந்த ஜன., மாதம் வரை மட்டுமே பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களுக்கும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை எடுப்பதும், பணிகளை முழுமையாக செய்வதில் தயக்கமும் காட்டுகின்றனர். பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: கடந்த பிப்., மாதத்திலிருந்து, அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர்களின் உதவியுடன் தான் ஊதியம் வழங்குகிறோம். இருப்பினும், பணிகள் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. தற்காலிகமாகவும் பணியாளர்கள் வருவதில்லை. சில பணியாளர்கள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அவர்கள் தங்களின் நிலுவைத்தொகையை கேட்கின்றனர். ஒவ்வொரு முறையும் இதே பிரச்னைதான் தொடர்கிறது. மாதம்தோறும், முறையாக அவர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !