பள்ளியில் உணவுத்திருவிழா :மாணவர்கள் அசத்தல்
உடுமலை: மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மெட்ரிக்., பள்ளியில், உணவுத் திருவிழா நடந்தது. விழாவில்,பள்ளித்தாளாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சைலஜா , நிர்வாக அதிகாரி கருப்பையா விழாவை துவக்கி வைத்தனர். ஜே.எஸ்.ஆர்., கல்விக்குழும தலைவர் சண்முகவேல், விழாவில் பங்கேற்ற மாணவர்களைப் பாராட்டினார். விழா நடுவராக ஜே.எஸ்.ஆர்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் சிவராமன் செயல்பட்டார். ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் மாணவர்கள் ஆறு குழுவாகப் பிரிந்து விழாவில் பங்கேற்றனர். முதல் குழு, உடல் வலுவை வலுப்படுத்தும் வகையில் பழ ரசங்கள், சூப் வகைகளும் தயாரித்தனர். இரண்டாம் குழு, வானவில் வண்ணங்களைக் கொண்டு சிறுதானிய உணவுகளை தயாரித்தனர். மூன்றாம் குழு, அனைத்து மாநிலங்களின் உணவுகளை தயாரித்து படைத்தனர். நான்காம் குழு, கிராமம் முதல் நகரம் வரை உள்ள உணவுகளை காட்சிப்படுத்தினர். ஐந்தாம் குழு, கைமணம் சார்ந்த உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தினர். இறுதியாக ஆறாம் குழு, ரோட்டுக் கடை சத்தான சிற்றுண்டி உணவுகளை தயாரித்தனர். இவ்வாறு மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உணவை வீணாக்காமல் உண்ணும் பண்பை வெளிப்படுத்தும் வகையில்,இவ்வுணவுத் திருவிழா நடைபெற்றது.