உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கரையை ஆக்கிரமிக்கும் சீமை கருவேலன்; பாசன விவசாயிகள் அதிருப்தி

கரையை ஆக்கிரமிக்கும் சீமை கருவேலன்; பாசன விவசாயிகள் அதிருப்தி

உடுமலை; திருமூர்த்தி அணையின் கரையில், செழித்து வளரும் சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பாசன விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்தில், திருப்பூர், கோவை மாவட்டத்துக்குட்பட்ட, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, இந்த அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. திருமூர்த்தி அணையானது, 2,679 மீ., நீளத்துக்கு அமைந்துள்ளது. கரையில், பூங்கா உட்பட கட்டமைப்புகள் இல்லாத நிலையில், திருமூர்த்திமலை ரோட்டுக்கும், அணை கரைக்கும், இடையிலான பகுதியில், பல்வேறு மரங்கள், இயற்கையாக செழித்து வளர்ந்துள்ளன. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, அணைக்கரையில், சீமை கருவேலன் மரங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரதான கால்வாயில் இருந்து, சாம்பல்மேடு வரை, பூங்கா அமைக்க, மரங்கள் அகற்றப்பட்ட இடத்தில், சீமை கருவேல மரங்கள் செழித்து வளர்ந்து வருகின்றன. அதே போல், காண்டூர் கால்வாய் அணையில் சேரும் இடத்திலிருந்து, நீச்சல் குளம் வரையிலான காலியிடம், சீமைகருவேல மரங்களின் வனமாக மாறியுள்ளது. இப்பகுதியில், மான் உட்பட தாவர உண்ணிகள், வனத்திலிருந்து வெளியேறி, அணைப்பகுதியில், தண்ணீர் குடிக்கச்செல்லும். இதனால், சுற்றுச்சூழலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், சீமைகருவேல மரத்தின் விதைகள், வனப்பகுதிக்குள் பரவ வாய்ப்புள்ளது. இதே போல், அணை நீரில் சேரும், அம்மரத்தின் விதைகள், இரு மாவட்ட பாசன நிலங்களுக்கும், சென்று சேரும். சூழல் சார்ந்த பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து பாசன விவசாயிகள் கூறியதாவது: திருமூர்த்தி அணை கரை, பிரதான கால்வாய் உள்ளிட்ட பாசன ஆதாரங்களின் அருகில், சீமை கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளது. பொதுப்பணித்துறை வாயிலாக அணை கரை மற்றும் இதர நீர் நிலைகளை ஒட்டி வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை பொதுப்பணித்துறை வாயிலாக அகற்ற வேண்டும். இதற்காக பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அணை சூழலை பாதுகாக்கும் வகையில், இப்பிரச்னை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை