துறைகள் ஏழு; மனுக்கள் பூஜ்யம்! உரிமை தொகைக்கு ஆர்வம்
உடுமலை; மலையாண்டிபட்டணத்தில் நடந்த சிறப்பு முகாமில், ஏழு அரசுத்துறைகளில் ஒரு மனு கூட பெறப்படவில்லை; மகளிர் உரிமைத்தொகைக்காக அதிகளவு மனுக்கள் பெறப்பட்டன. தமிழக அரசின், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, குரல்குட்டை ஊராட்சிக்குட்பட்ட மலையாண்டிபட்டணம் கிராமத்தில் இம்முகாம் நடந்தது. முகாமில், அதிகபட்சமாக, மகளிர் உரிமை தொகைக்காக, 277 மனுக்கள் பெறப்பட்டது. இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த மனுக்கள், 242; ஆதார் உள்ளிட்ட டிஜிடல் சேவைகளுக்காக, 90 மனுக்கள் பெறப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறை 15; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 43 மனுக்கள் என மொத்தம், 726 மனுக்கள் பெறப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலத்துறை, வேளாண்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட 7 துறைகளில் ஒரு மனு கூட பெறப்படவில்லை.