உடுமலை வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி வனத்துறையினர் ஆய்வில் அதிர்ச்சி
உடுமலை:உடுமலை வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டுள்ளதை, வனத்துறையினர் ஆய்வு செய்து, வேருடன் பிடுங்கி தீ வைத்து அழித்தனர்.திருப்பூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், வனச்சரகர் மணிகண்டன், வனவர் ஜெய்சன் பிரதீப் குமார் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட குழுவினர், உடுமலை வனச்சரகம் தளி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, குழிப்பட்டி, குருமலை பகுதியிலுள்ள, சோழவந்தான் மலைப்பகுதிகளில் , ஆற்றங்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, 2 மீட்டர் நீளம் வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகள் இருப்பது கண்டறியப்பட்டது.இந்த கஞ்சா செடிகள், 4.5 மாதம் வளர்ந்த நிலையில், ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராகும். அவற்றை வேருடன் பிடுங்கி, தீ வைத்து அழித்தனர்.ஆய்வக பகுப்பாய்விற்காக, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் யாரும் இல்லாத நிலையில், போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின் கீழ், வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.மலைவாழ் மக்கள் குடியிருப்புகளைச்சேர்ந்த நபர்களால் சாகுபடி செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.வனப்பகுதியில் கஞ்சா பயிரிடுதல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசித்து வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளளது.கடந்த சில நாட்களுக்கு முன், வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்த நபர்களுக்கு, ரூ. 2.40 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, தொடர் கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த, 3 மாதத்திற்கு முன், மாவடப்பு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதும், அதனை குடித்த, பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்தவர்கள் பாதித்தனர்.அப்போதே வனப்பகுதியில் கஞ்சா, கள்ளச்சாராயம் புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. தற்போது, மலைப்பகுதிகளில் கஞ்சா சாகுபடி செய்யப்படுவதும், மலையடிவாரத்திலுள்ள, எரிசனம்பட்டி, ராவணாபுரம், தேவனுார்புதுார் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதும் உறுதியாகியுள்ளது.வனப்பகுதிகளில் முழுமையான ஆய்வு மேற்கொண்டு கஞ்சா சாகுபடியை அழிக்கவும், கஞ்சா விற்பனையை தடுக்கவும், வனத்துறையினரும், திருப்பூர் மாவட்ட போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.