சாப்ட்வேர் கோளாறு சீரமைப்பு ; ஆதார் மைய இயக்கம் துவக்கம்
திருப்பூர்; சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்த, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள ஆதார் மையங்களின் இயக்கம் முடங்கியது.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, ஒன்பது தாலுகா அலுவலகங்களில், மொத்தம் பத்து ஆதார் மையங்கள் அமைந்துள்ளன. சாப்ட்வேர் கோளாறு காரணமாக, ஆதார் பதிவு முடங்கியதால், புதிய பதிவு, திருத்தங்கள் செய்ய, இம்மையங்களுக்கு சென்ற பொதுமக்கள், மாணவ, மாணவியர், ஏமாற்றமடைந்தனர்.அவசர மாற்றங்கள் தேவைப்படுவோர், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், வங்கி, தபால் அலுவலக ஆதார் மையங்களை நாடினர். இதனால், பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் முதல் சாப்ட்வேர் கோளாறு சரி செய்யும் பணிகள் துவங்கின. கோளாறு ஏற்படுத்திய 197.2 வெர்ஷன், 197.5 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள ஆதார் மையங்கள் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தன.இது குறித்து, அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலர்கள் கூறியதாவது:சாப்ட்வேர் வெர்ஷன் புதுப்பிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆதார் மையங்களும் மீண்டும் இயங்கத்துவங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், ஒன்பது தாலுகா அலுவலகங்களில் அமைந்துள்ள, 10 மையங்களும் முழு இயக்கநிலையில் உள்ளன. கடந்த ஐந்து நாட்களாக, ஆதார் பதிவுக்கு வந்த பொதுமக்களிடமிருந்து, பெயர், மொபைல் எண் விவரங்கள் பெறப்பட்டு, பதிவேட்டில் எழுதி வைக்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது, ஆதார் பதிவு நடைபெறுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.