அரசு மானியத்துடன் சோலார் நிறுவலாம்! மின் சிக்கன வார விழாவில் அட்வைஸ்
திருப்பூர்; திருப்பூர் மின்கோட்டம் சார்பில், மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு நேற்று நடந்தது.பல்லடம் ரோடு, லட்சுமி திருமண மண்பம் அருகே துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை, மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) விஜயேஸ்வரன் துவக்கி வைத்தார். செயற்பொறியாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம், உதவி செயற்பொறியாளர் சார்லஸ் ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.அதனை தொடர்ந்து, எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவியகளுக்கு, மின் சிக்கன விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. அனைத்து வீடுகளிலும், அரசு மானியத்துடன் கூடிய சோலார் நிறுவி, பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.அனைத்து வீடுகளிலும், மின் கசிவு ஏற்படாத வகையில், மின்சாதனங்களை பொருத்த வேண்டும். சாதாரண பல்புகளுக்கு பதிலாக, 'எலக்ட்ரானிக் சோக்'குடன் கூடிய 'டியூப் லைட்டுகளை பயன்படுத்த வேண்டும். குமிழ் லைட்டுகளை பயன்படுத்தும் போது, 90 சதவீத மின்சாரம், வெப்பமாக விரையமாகிறது. 'எலக்ட்ரானிக் சோக்' பயன்படுத்தினால், 30 சதவீத மின்சாரத்தை சேமிக்கலாம். பிரிட்ஜ் கதவுகளை அடிக்கடி திறந்து மூடுவதை தவிர்க்க வேண்டும். பழுதான பிரிட்ஜ் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.'ஏசி' பயன்படுத்தினால், ஒரு மணி நேரத்துக்கு 10 ரூபாய் செலவாகும்; மின் விசிறியை பயன்படுத்தினால், 30 பைசா மட்டுமே செலவாகும். பகல் நேரங்களில் இயன்றவரை மின்விளக்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பது உட்பட அறிவுரை வழங்கப்பட்டது.