உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெற்ற தாயை அனாதை எனக்கூறிய மகன்; முதியோர் இல்லத்தில் விட்டுச்சென்ற கொடுமை

பெற்ற தாயை அனாதை எனக்கூறிய மகன்; முதியோர் இல்லத்தில் விட்டுச்சென்ற கொடுமை

''இ ந்த வயசான அம்மா ரோட்டோரம் அனாதையா உட்கார்ந்திருந்தாங்க. நீங்க முதியோர் இல்லம் நடத்தறது தெரிஞ்சு இங்க கூட்டிட்டு வந்தேன்,'' என கூறியபடி, மூதாட்டி ஒருவரை, அவிநாசியில் உள்ள 'சீடு'(seed) முதியோர் இல்லத்தில் விட்டுச் சென்றார் ஒரு இளைஞர். மூதாட்டிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. முதியோர் இல்ல நிர்வாகிகள், அவரை நல்ல முறையில் பராமரித்து வந்தனர். இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. அதுவரை வாய் திறக்காத மூதாட்டி மனம் திறந்து பேசினார்: 'நான் ஆதரவற்றவள் என்ற அடையாளத்துடன் இரண்டு ஆண்டுக்கு முன் என்னை இங்கு அழைத்து வந்து விட்டுச் சென்றானே ஒருவன்; அவன் என் மகன்தான்' மூதாட்டியின் கண்கள் கசிந்தன. ''முதியோர் இல்லத்தில் வசிக்கும் எண்ணற்ற மூத்த குடிமக்களின் கசப்பு கலந்த வாழ்வியல் சூழல், இப்படி தான் இருக்கிறது'' என்கிறார். 'சீடு' அறக்கட்டளை நிர்வாகி கலைவாணி. அவர் நம்மிடம் பகிர்ந்தவை: இதுவரை, 800க்கும் மேற்பட்ட முதியோரை பராமரித்திருக்கிறோம். 172 பேர் வயது மூப்பு காரணமாக இறந்துள்ளனர்; அவர்களை முறைப்படி அடக்கம் செய்து, ஆண்டுக்கொரு முறை திதி கொடுத்து, அவர்களது ரத்த உறவுகளை போன்று சேவையாற்றி வருகிறோம். உறவுகள் இருந்தும், அனாதை போன்று எங்களிடம் இருப்போரும் உண்டு; அவர்கள் இறந்து போகும் நிலையில், தகவல் சொன்னால் கூட அவர்களின் பிள்ளைகள் வருவதில்லை; 'கொஞ்சம் வேலையாக இருக்கோம்; நீங்களே காரியம் பண்ணிடுங்க'ன்னு சொல்லும் ஆட்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இறந்தவர்கள் பெயரில் சொத்து, பணம் எதுவும் இருந்தால், அதை வாங்குவதற்கு இறப்பு சான்றிதழ் கேட்டு மட்டும், சிலர் வருவர். எங்கள் சேவைக்கு அரசு மற்றும் தனிநபர்கள், தனியார் அமைப்பினர் இயன்றளவு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இவ்வாறு, கலைவாணி கூறினார். வீட்டிற்கு பதிலாக ரோட்டில்...! கடந்த, 25 ஆண்டுகளில், 1,000க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை இனங்கண்டு, அவர்களை காப்பத்தில் ஒப்படைத்துள்ளோம். கடந்த, 5 ஆண்டாக சேவூர் போத்தம்பாளையத்தில் காப்பம் நடத்தி வருகிறோம். ரோட்டோரம் ஆதரவற்று, அனாதைகளாய் இருப்போரை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணி செய்து வருகிறோம். எங்கள் அனுபவத்தில், மூத்த குடிமக்கள் பலர், உறவினர்கள் இருந்தும் நிராகரிக்கப்படுகின்றனர். கடைசி காலத்தில் வீட்டில் இருப்பதை விட ரோட்டில் இருக்கும் நிலையை தான் பார்க்க முடிகிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு பெரியவர்கள் சுமையாகி விடுகின்றனர். உறவுகளால் அனுசரிக்கப்படுபவர்கள், வெறும், 10 சதவீதம் பேர் மட்டுமே. பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும்.- தெய்வராஜ், நிறுவனத் தலைவர், நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை ஏன் தஞ்சம் அடைந்தோம்? கலைச்செல்வி, 77, முதியோர் காப்பகவாசி எனக்கு, 13 வயதில் திருமணம் செஞ்சு வைச்சுட்டாங்க. அடுத்த மூணு மாசத்துல என் வீட்டுக்காரர் இறந்துட்டார். அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கல. மெட்ராஸ் போய், படிச்சு, மதுரை மாற்றுத்திறனாளிகள் பள்ளியில வேலை செஞ்சேன். பணி ஓய்வுக்கு பின் என் சொந்த ஊரான திருப்பூருக்கு வந்தேன். உடம்பும் சரியில்லாம போச்சு. என்னை கவனிச்சக்கவும் யாருமில்ல; இங்க வந்துட்டேன். நல்லப்பன், 87, முதியோர் காப்பகவாசி: நான் கல்யாணம் பண்ணிக்கல. கேரளாவுல தான் விவசாய கூலியாக ரொம்ப வருஷம் இருந்தேன். அப்புறம் வயசான பிறகு, உடம்புக்கு முடியல. கடைசி காலத்துல சொந்த ஊரான திருப்பூருக்கு போயிடலாம்ன்னு நினைச்சு இங்க வந்தேன். என்னை கவனிச்சுக்க யாரும் இல்லாததால, அவிநாசி போலீஸ் ஸ்டேஷன்ல போய், ஆதரவு கேட்டேன்; இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டாங்க. எந்த குறையும் இல்லாம நிம்மதியாக இருக்கேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ