குறைவான நீரிலும் செழிக்கும் கீரை! வழிகாட்டும் விவசாயிகள்
உடுமலை; குறைந்த நீர்த்தேவையுள்ள கீரை சாகுபடியில், நிரந்தர வருவாயும் கிடைப்பதால், உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் அச்சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.உடுமலை அருகே, கிளுவங்காட்டூர், குறிச்சிக்கோட்டை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, ஆண்டு முழுவதும் கீரை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.அப்பகுதியில் இருந்து, உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் விற்பனைக்கு கீரைக்கட்டுகள் கொண்டு வரப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது:சிறுக்கீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரைகள் விதைத்த, 25வது நாளில் அறுவடை செய்யப்படுகிறது. பத்து சென்ட் அளவுக்கு பாத்தி பிரித்து, ஒவ்வொரு கட்டமாக விதைப்பு செய்கிறோம். விதைத்து, 25வது நாள் முதல் கீரை அறுவடை செய்கிறோம்.மணத்தக்காளி கீரைக்கு மட்டும், நாற்று உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. விளைநிலத்தில், 40 வயதுடைய நாற்றுகளை நடவு செய்து, அதிலிருந்து ஒரு மாதம் கழித்து அறுவடையை துவக்குகிறோம்.அடுத்து, 15 முதல், 20 நாட்கள் இடைவெளியில் கீரை தழைத்து, அடுத்த அறுவடைக்கு தயாராகிறது. ஒருமுறை நடவு செய்தால், 20 முறை, கீரை அறுவடை செய்யமுடியும். அதேபோல் பாலக்கீரையும் தொடர்ந்து, 6 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம்.அரைக்கீரை, சிறுக்கீரை மற்றும் வெந்தயக்கீரை உள்ளிட்ட வகைளுக்கு, விதைப்பின் போது ஒரு தண்ணீரும், அறுவடைக்கு முன் ஒரு தண்ணீர் என, இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானதாகும்.மற்ற காய்கறி சாகுபடியை ஒப்பிடும்போது, கீரை சாகுபடிக்கு குறைந்தபட்ச தண்ணீர் போதுமானதாகும்.உழவர் சந்தைக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம், 100 கட்டுகள் வரை விற்பனைக்கு எடுத்து செல்கிறோம். குறைந்த பரப்பளவில், குறைவான தண்ணீரில், நிரந்தர வருவாய் கிடைக்க, கீரை சாகுபடியே கைகொடுக்கிறது.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.