விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு ஸ்பாட் பைன்
திருப்பூர்; திருப்பூரில் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாத வாகன ஓட்டிகளிடம் 'ஸ்பாட் பைன்' வசூலிக்கப்படுகிறது.திருப்பூரில் விபத்தை குறைக்கவும், தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைக் களையவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு, முக்கிய சந்திப்புகளில் நின்று வாகன தணிக்கை செய்து அபராதம் விதித்து வருகின்றனர். முன்பு, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து, நோட்டீஸ் கொடுத்து போலீசார் அனுப்பி வந்தனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சாலை விபத்துகளில், 12 பேர் பலியாகியுள்ளனர்; 40 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், போலீசார் போக்குவரத்து விதிமீறும், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் வசூலிக்க ஆரம்பித்துள்ளனர். வாகன ஓட்டிகள் தங்கள் தவறை உணர்ந்து, மீண்டும் அதை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் முன்னோட்டமாக இதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.'ஹெல்மெட்', 'சீட் பெல்ட்', சிக்னல் ஜம்பிங் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்கு 500 ரூபாய் முதல் ஆரம்பித்து, 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். மதுபோதையில் வாகனம் இயக்குவது தொடர்பான அபராதத்தை மட்டும் கோர்ட்டில் கட்டப்படுகிறது. பிற விதிமீறல்களுக்கு கார்டு, 'ஜிபே' முறையில் இ-சலான் மெஷினில் அபராதத்தை கட்ட அறிவுறுத்துகின்றனர்.ஏன் 'ஸ்பாட் பைன்'கமிஷனர் பேட்டிபோலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:மாநகரில் சாலை விபத்துகளில் கடந்த மாதத்தில் உயிரிழப்பு, காயம் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, 'ஸ்பாட் பைன்' முறையில் அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று செய்யும் போது, வாகன ஓட்டிகள் மீண்டும் அந்த தவறை செய்ய மாட்டார்கள். மற்ற மாநகரங்களில் எல்லாம் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. விதிமீறல் தொடர்பாக வழக்குகள் குறித்து ஆய்வு செய்த போது, ஒரு வாகன ஓட்டி, 16 விதிமீறல்களில் ஈடுபட்டு, ஒன்றுக்கு கூட அபராத தொகை செலுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளார். வாகன ஓட்டிகள் தவறை திருத்தி கொள்ளவும், விபத்துகளை குறைக்கும் வகையிலும் முன்னோட்டமாக 'ஸ்பாட் பைன்' கொண்டு வரப்பட்டுள்ளது. வாகன தணிக்கையின் போது, 'பாடி கேமரா' பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
போலீசுடன் வாக்குவாதம்
மாநகர போலீசார் திடீரென ஸ்பாட் பைன் வசூலிக்கத் துவங்கியுள்ளதை எதிர்பாராத வாகன ஓட்டிகள், போலீசாருடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர். போலீசார் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க முடியாத நிலை உள்ளது. ''அபராத தொகையை 'ஆன்லைனில்' செலுத்திவந்தோம். உடனடியாக 'ஸ்பாட் பைன்' தொகையை வைத்திருக்க முடியாது. பணம் வைத்திராதவர்களிடம், ஆன்லைனில் வசூலிக்கலாமே... சில இடங்களில் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அத்துமீறி நடந்துகொள்வதும், லஞ்சம் பெறுவதும் நடக்கிறது. இதைத் தடுக்க வேண்டும்'' என்கின்றனர் வாகன ஓட்டிகள்.