ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கோலாகலம்
திருப்பூர்; ஓம் சக்தி… பராசக்தி' என்று கோஷமிட்டபடி, ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர். திருப்பூரின் காவல் தெய்மாகிய ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில், ஆடி குண்டம் திருவிழா 21 ம் தேதி மகாமுனி பூஜையுடன் துவங்கியது; 22 ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல், நொய்யலில் இருந்து சக்தி அழைத்தல்; 23ம் தேதி பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு வழிபாடுகளுக்கு பிறகு, கடந்த, 27 ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது; நேற்று காலை, குண்டம் திருவிழா நடந்தது. அதிகாலையில், காப்பு கட்டிய பக்தர்கள் வரிசையில் இருந்தபடி, குண்டம் இறங்கினர். தலைமை பூசாரி, அருளாளர்கள் குண்டம் இறங்கிய பின், பக்தர்கள், 'ஓம்சக்தி... பராசக்தி' என்று கோஷமிட்டபடி குண்டம் இறங்கி வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு, மகா அபிேஷகம், அக்னி அபிேஷகம், மாவிளக்கு மற்றும் பொங்கல் விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய செல்லாண்டியம்மன், மாலையில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மஞ்சள்நீர் விழாவும், 1 ம் தேதி மறுபூஜையும் நடக்க உள்ளது.