உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புவிசார் குறியீடு ரகங்களுடன் மாநில கைத்தறி துணி கண்காட்சி

புவிசார் குறியீடு ரகங்களுடன் மாநில கைத்தறி துணி கண்காட்சி

திருப்பூர்:தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறை சார்பில், திருப்பூர், குலாலர் திருமண மண்டபத்தில் நேற்று மாநில அளவிலான கைத்தறி துணி கண்காட்சி துவங்கியது. அமைச்சர்கள் காந்தி, சாமிநாதன் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.அரசு முதன்மை செயலர் அமுதவல்லி, கைத்தறித்துறை இயக்குனர் சண்முகசுந்தரம், கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தனர். கண்காட்சி, ஜன., 11 வரை நடக்கிறது. மொத்தம் 50 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. சத்தீஸ்கர் 'கோசா' சேலை, மங்களகிரி கைத்தறி சேலை மற்றும் துணி வகைகள், உ.பி., மாநில கைத்தறி சேலை, ஜார்க்கண்ட் பட்டு சேலை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலுார், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், மதுரை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், கடலுார், கும்பகோணம் ஆகிய மாவட்டங்களில் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த சேலைகளும் இடம்பெற்றுள்ளன.புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்களான கோவை கோரா காட்டன், சேலம் வெண்பட்டு வேட்டி, திருபுவனம் பட்டு சேலை, காஞ்சிபுரம் பட்டு சேலை. திருநெல்வேலி 'செடிபுட்டா' சேலை, ஈரோடு பவானி ஜமுக்காளம், குறிஞ்சிப்பாடி லுங்கி, கரூர் பெட்ஷீட், சென்னிமலை பெட்ஷீட், துண்டு, மெத்தை விரிப்பு, கால் மிதியடி ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.அரசு வழங்கும் 30 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை துவங்கியுள்ளது. கண்காட்சியில் 50 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்றுள்ளன. 2 கோடி ரூபாய் அளவிலான விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை தொடர்ந்து நாடு முழுதும் துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், இது போன்ற கண்காட்சி மற்றும் விழாக்களை தமிழக அரசு நடத்துவது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !