வார இறுதியில் சூறைக்காற்று; வானிலை எச்சரிக்கை
திருப்பூர்; தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., இந்திய வானிலைத்துறையின் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் இணைந்து, மாவட்ட வாரியாக வாராந்திர வானிலை நிலவரத்தை அறிவித்து வருகின்றன.வரும், 27ம் தேதி வரை, திருப்பூரில், வானம் பெரும்பாலும் மேக மூட்டத்துடன் இருக்கும். அவ்வப்போது, துாறல் மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.அதிகபட்ச வெப்பநிலை, 38 - 39 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 27 - 28 டிகிரி செல்சியசாக இருக்கும். காலை நேரத்தில் காற்றின் ஈரப்பதம், 60 முதல், 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 20 முதல், 30 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.சராசரியாக, காற்று மணிக்கு, 12 முதல், 20 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இருப்பினும் இந்த வாரம், இடி, மின்னல், சூறைக்காற்றுடன் துாறல் மழை பெய்யவும்வாய்ப்புண்டு. விவசாயிகளுக்கு 'டிப்ஸ்'
ஐந்து மாதங்களுக்கு மேல் வளர்ந்துள்ள வாழைக்கு முட்டுக் கொடுக்க வேண்டும்.பயிர்களின் மேல் மூடாக்கு இடுவதன் வாயிலாக, மழையால் கிடைத்த ஈரப்பதத்தை ஆவியாகாமல் தடுக்க முடியும்.வாழையில் குருத்து அழுகல் நோய் தென்படுகிறது. இதை தடுக்க, ஒரு லிட்டர் நீரில், 20 கிராம் பிளீச்சிங் பவுடர் கலந்து, மரத்தின் அருகே ஊற்ற வேண்டும்.ஆடுகளுக்கு துள்ளுமாரி நோய் காணப்படுகிறது. இதற்கு ஆடுகளை வெயில் வந்தபின், மேய்ச்சலுக்கு விடலாம். மேலும்,அருகேயுள்ள கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.