தெரு நாய்களால் ஆடு, கோழி பலி தொடர்கிறது
திருப்பூர் : வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவை ஆடு, கோழி கால்நடைகளை கடிப்பதும், அதனால், அவை பலியாவதும் தொடர்கிறது. கடந்த இரு நாளில் மட்டும், 10 சம்பவங்கள் நடந்துள்ளன.விவசாயிகள் கூறுகையில், ''நேற்று முன்தினம், அவிநாசிபாளையம் கண்டியன்கோவில் பகுதியில், நாய்கள் கடித்ததில், 5 கோழிகள் இறந்துள்ளன. வெள்ளகோவில் சின்னகள்ளமடை பகுதியில், ஆறு ஆடுகள், நாய்க்கடிக்கு பலியானது. நேற்று, அய்யனுார் பகுதியில் நாய்கள் கடித்ததில், 3 ஆடுகள் பலியாகியிருக்கிறது. விவசாயிகள் திரண்டு, போராட்டக்களத்தில் குதிப்பதை தவிர வேறு வழியில்லை'' என்றனர்.பி.ஏ.பி., வெள்ளகோவில் பாசன கால்வாய் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில், ''இழப்பீடு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கினாலும் எதுவும் நடக்கவில்லை. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை நல நிதி வழங்குவதற்கான நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, தற்போது நம்பிக்கையளித்துள்ளது; அதற்காக காத்துள்ளோம்'' என்றார்.
நிரந்தர கொட்டகையில் ஆடு வளர்ப்பு
வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள், பெரும்பாலும் அவற்றை இறைச்சிக்காகவே விற்பனை செய்கின்றனர்; திறந்தவெளியில் பட்டி அமைத்து தான், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நிரந்தர கொட்டகை அமைத்து அதில் ஆடு வளர்த்து, இறைச்சி சந்தை பயன்பாட்டுக்கு விற்பனை செய்யும் பண்ணையும் சில இடங்களில் உருவாகி வருகிறது. ஆனால், இது தங்களுக்குப் பாதிப்பாக இருக்கும் என்கிறார்கள் ஆடு வளர்ப்பு விவசாயிகள்.