வேலைநிறுத்த போராட்டம் பிசுபிசுப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை
- நிருபர் குழு -நாடு தழுவிய அளவில், பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டம் பிசுபிசுத்தது.பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், மறியல் போராட்டம் நடந்தது.அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், பொள்ளாச்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட, 31 பெண்கள் உள்ளிட்ட, 90 பேரை போலீசார் கைது செய்தனர்.ஜாக்டோ - ஜியோ சார்பில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில், மொத்தம், 577 பேர் விடுப்பு எடுத்தனர்.வால்பாறையில், காந்திசிலை வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொது வேலைநிறுத்த போராட்டத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை. பஸ்கள் வழக்கம் போல இயங்கின. உடுமலை
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு, தி.மு.க., நகரச்செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட, 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பள்ளபாளையத்தில் நடந்த போராட்டத்திற்கு, விவசாய சங்க தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட, 135 பேர் கைது செய்யப்பட்டனர்.மடத்துக்குளத்தில் மா.கம்யூ., தாலுகா செயலாளர் வடிவேல் தலைமையில் மறியல் நடந்தது. குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இ.கம்யூ., கட்சி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில் மறியல் நடந்தது.