நீட் தேர்வு மையங்கள் மாணவர் அறியலாம்
திருப்பூர்; 'நீட்' தேர்வு எந்தெந்த ஊரில் நடக்க போகிறது என்ற விபரத்தை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாடு முழுதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பு, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ேஹாமியோபதி படிப்பு மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 'நீட்'தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.இந்தாண்டு தேர்வு, மே, 4ம் தேதி நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் மாணவ, மாணவியர் உட்பட, 1,200 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான உத்தேச தேர்வு மையம் குறித்த அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. https://cnr.nic.inஎன்ற இணையதளத்தில் இது குறித்து அறிந்து கொள்ளலாம்.திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறுகையில், ''நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது உத்தேசமாக இரண்டு அல்லது மூன்று மாவட்ட தேர்வு மையங்களை விண்ணப்பதாரர் தேர்வு செய்திருப்பர். தற்போது வெளியாகியுள்ள பட்டியலில், மாணவர்கள் எந்த மாவட்டத்தில் தேர்வு எழுத போகிறீர்கள் என்ற விவரம் வெளியாகி இருக்கும். தேர்வு மையம் குறித்த விபரம் இம்மாத இறுதிக்கு வந்து விடும்,'' என்றார்.