உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளையாட்டின் முக்கியத்துவம் மாணவர்கள் உணர வேண்டும்

விளையாட்டின் முக்கியத்துவம் மாணவர்கள் உணர வேண்டும்

திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாணவ, மாணவியரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சமூகத்திறன்களை வளர்க்கவும், விளையாட்டு உதவுகிறது. சிக்கண்ணா அரசுக் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ராஜாராம் நம்முடன் பகிர்ந்தவை: படித்து வரும் மாணவர்களிடம் விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் குறைவாகத்தான் இருக்கிறது. விளையாட்டின் முக்கியத்துவத்தை அனைத்து மாணவர்களும் உணர வேண்டும். விளையாடும்போது அனைத்துவித நெருக்கடிகளையும் ஒருவன் மறந்து விடுகிறான். அனைத்தையும் மறக்கும்போது மனதில் உள்ள பாரம் குறையும். உள்ளம் தெளிவடையும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள மனம் தயாராகும். எளிமையாக கவனம் செலுத்தி ஒன்றைக் கற்க முடியும். அதுவே தன்னம்பிக்கையை வளர்க்கும்; தன்னம்பிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும். நோயின்றி வாழவும் உதவும். உடலளவில் இத்தகைய நன்மைகளைக் கொடுத்தாலும் சமூக அளவிலும் விளையாட்டால் உயர முடியும். அரசுப் பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. எனவே விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். மாதம் ஒரு போட்டி என்று நடத்தலாம். விளையாட்டு வல்லுனர்களை வரவழைத்து கலந்துரையாடல் நடத்தலாம். --- சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்த முதல்வர் கோப்பைக்கான ஹாக்கிப்போட்டியில் மாணவியர் இடையே நடந்த மோதல். தினமும் பயிற்சிக்காக நேரம் ஒதுக்கும் மாணவர்கள் முதல்வர் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள திருப்பூரைச் சேர்ந்த முகேஷ் விஷ்ணு: நான் பிளஸ் 2 வகுப்பு படிக்கிறேன். எனக்கு இரண்டாம் வகுப்பில் இருந்து விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். ஹாக்கியும், சிலம்பமும் எனக்கு பிடித்தவை. ஹாக்கியில், மாநில அளவிலான போட்டிக்கு 2 முறை சென்றுள்ளேன். காலை நேரத்தில் தினமும் பயிற்சி செய்வேன். மாலை நேரத்தை படிப்பிற்காக பயன்படுத்திக்கொள்வேன். விளையாட்டிலும் படிப்பிலும் நன்றாக கவனம் செலுத்துவேன். 10ம் வகுப்பில் கணிதத்திலும் அறிவியலிலும் 100க்கு 100 மதிப்பெண் என மொத்தம் 488 பெற்றேன். 12ம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெறுவேன். யுவ ஹரி: நான் 10ம் வகுப்பு படிக்கிறேன். நான்காம் வகுப்பு படிக்கும்போதே விளையாட்டின்மீது ஆர்வம் வந்துவிட்டது. ஹாக்கியும் தடகளப்போட்டியும் எனக்குப் பிடித்தவை. 2 முறை மாநில அளவிலான போட்டிக்கு சென்றுள்ளேன். முதல்வர் கோப்பையில் ஹாக்கி விளையாட வந்துள்ளேன். காலை 1 மணி நேரமும் மாலை 2 மணி நேரமும் விளையாட்டுப் பயிற்சி செய்கிறேன். படிப்பிலும் நல்ல கவனம் செலுத்துகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை