உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானியத்தில் உலர் தீவன திட்டம்; மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

மானியத்தில் உலர் தீவன திட்டம்; மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

உடுமலை; கால்நடை கிளை மருந்தகங்களில், உலர் தீவன கிடங்கு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக மாடுகள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. விளைநிலங்களில், பசுந்தீவனமும், வைக்கோல் உட்பட உலர் தீவனங்களும், பால் உற்பத்தி மாடுகளுக்கு முக்கிய தீவனமாக வழங்கப்படுகின்றன.தேவைக்கேற்ப வைக்கோல் உட்பட உலர் தீவனம் கிடைக்காததால், பிற மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். இதனால், கூடுதல் செலவு ஏற்படுகிறது.தமிழக அரசு கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படாமல் இருக்க உலர் தீவன கிடங்கு திட்டத்தை, சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது.உடுமலை வட்டாரத்தில், கால்நடைத்துறை சார்பில், இக்கிடங்கு வாளவாடி கால்நடை மருந்தகத்தில், துவங்கப்பட்டது. திட்டத்தில், 5 மாடுகளுக்கு அதிகபட்சமாக 105 கிலோ வைக்கோல், மானியத்தில், கிலோ 2 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.தீவனப்பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கால்நடை வளர்ப்போர், இத்திட்டத்தில் பயன்பெற அதிக ஆர்வம் காட்டினர். உலர் தீவன கிடங்கில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிலோ வைக்கோல் பயனாளிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.பிற பகுதிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது. கால்நடைத்துறை சார்பில், மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !