சோளம் விதைக்கு மானியம்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், நெல், 10 ஆயிரம் எக்டர் பரப்பிலும், தானியங்கள், 60 ஆயிரம் எக்டர், பயறு வகைகள், 20 ஆயிரம் எக்டர், நிலக்கடலை 10 ஆயிரம் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது.தானியத்தில், சோளம் மட்டும், 37 ஆயிரம் எக்டர் பயிரிடப்படுகிறது. உள்ளூர் ரகங்களை பயிரிடு வதால், மகசூல் குறைந்துவிடுகிறது. மகசூல் அதிகரிக்க ஏதுவாக, 'கோ -32' ரக சோளம் அறிமுகம் செய்யப்பட்டது.சோளம் விதைக்கு, கிலோ 30 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. விதைகள் வினியோகத்துக்கு, கிலோவுக்கு 30 ரூபாய் மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன.பல்லடம் தாலுகா, நாரணாபுரம் கிராமத்தில், முத்துசாமி என்பவரின் 20 ஏக்கர் தோட்டத்தில், சோளம் விதைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. விதைப்பண்ணை திடலை, திட்ட ஆலோசகர் அரசப்பன், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) வசந்தா, வேளாண்மை அலுவலர் அஜித், உதவி விதை அலுவலர் முத்துசெல்வன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.