துவக்கப்பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
திருப்பூர்; ஆண்டு இறுதித்தேர்வுகள் முடிந்ததையடுத்து, துவக்க பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், முழு ஆண்டு இறுதி தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க தொடக்க கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு முடியும் முன்பே, 1- 5ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் துவங்கின. நேற்றுடன் தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று முதல் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று துவங்கிய ஆறு முதல் எட்டாம் வகுப்பு தேர்வுகள் வரும், 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. வரும் 25ம் தேதி முதல் நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பழநி கூறுகையில், ''துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., உட்பட துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், வரும், 30ம் தேதி வரை பணிக்கு வர வேண்டும். இறுதி தேர்வு அடிப்படையிலான தேர்ச்சி அறிக்கையை, வரும், 30ம் தேதி சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.விடைத்தாள் மதிப்பீடு செய்வது, அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர்களை சேர்ப்பது உள்ளிட்ட தலைமை ஆசிரியர் வழங்கும் நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.