உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலம்

தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலம்

திருப்பூர்; 'விசுவாவசு' தமிழ்ப்புத்தாண்டு நேற்று பிறந்தது. திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், ஆறுகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, விநாயகர் கோவில்களில் அபிேஷகம் செய்து வழிபட்டனர். கோவில்களில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.தமிழ்ப்புத்தாண்டு 'விசுவாவசு' நேற்று பிறந்தது. திருப்பூர் பகுதி கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர் குழுவினர், கொடிவேரி, கொடுமுடி, மேட்டுப்பாளையம், பவானி கூடுதுறை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து, தீர்த்தம் எடுத்து வந்தனர்.அதிகாலையில் சென்று தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள், மேள தாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அந்தந்த வீதிகளில் இருந்தவர்கள், தண்ணீர் ஊற்றியும், நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கியும் வரவேற்றனர். கோவில்களில், காலை, 10:00 மணிக்கு மேல், மகா அபிேஷகம் நடந்தது.புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தமும் அபிேஷகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கோவில்கள், தோரணங்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விநாயகர் கோவில்களில், கொன்றை மலர் சூட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து, கோவிலில் அர்ச்சகர்கள், பஞ்சாங்கம் வாசித்து, அதன் பலன்களை பக்தர்களுக்கு விளக்கினர்.*அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து செல்ல திருப்பூர், பெருமாநல்லுார் வட்டார கிராமங்களிலிருந்து பக்தர்கள் குழுவினர் திரண்டதால், நேற்று அதிகாலை முதலே, கோவில் வளாகம் பக்தர்களால் நிரம்பி காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சாமி தரிசனம் செய்தனர். நேர்த்தி கடன் நிறைவேற பக்தர்கள் மயில் காவடி எடுத்தனர். அன்னதானம் செய்தனர்.* திருப்பூர் ஷீரடி சாய்பாபா கோவிலில் நடந்த பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு, நாணயம், அட்சதை மற்றும் பாபா போட்டோ ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. * திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வழிபட்டனர். அர்த்தஜாம பூஜை அடியார் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், தில்லைவாழ் அந்தணர் உள்ளிட்ட தொகை அடியார்கள் குருபூஜை நடந்தது. * சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடந்தது. பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பக்தர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.* திருப்பூர் கோட்டை ஸ்ரீமாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே, சித்திரைக்கனி பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.* கேரள மக்கள், விஷூ கனி என்ற பெயரில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். திருப்பூர் குருவாயூரப்பன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தஜ. பக்தர்கள் அதிகாலை முதல், வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில், கண்ணாடி முன் பல்வேறு வகை பழங்களை வைத்து, சித்திரைக்கனி மற்றும் 'விஷூ கனி' தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.* அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், பலவகை பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள், பால்காவடி எடுத்துச்சென்று சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். முருகர், வள்ளி, தெய்வானை, வீரபாகு ஆகிய தெய்வங்கள், தங்ககாப்பு அலங்காரம் மற்றும் கனி அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில், பக்தர்களுக்கு, முக்கனியுடன் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.

'நிறைவான மழை பெய்யும்'

பூச்சக்காடு செல்வவிநாயகர் கோவிலில், நேற்று, மகா அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. சித்திரைக்கனி வழிபாடுகளைத் தொடர்ந்து, கோவில் அர்ச்சகர் பஞ்சாங்கம் வாசித்து பேசுகையில்,'' தினம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என, ஐந்து அங்கங்களை கொண்டது பஞ்சாங்கம்; இவை, மனித வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பஞ்சாங்கம் மூலம் கிரஹ சஞ்சாரங்களை அறிந்து, அதற்கேற்ப வழிபாடு நடத்தி, நன்மைகளை பெறலாம். தமிழ் ஆண்டுகள், 60 உள்ளன; தற்போது பிறந்துள்ளது 'விசுவாவசு' ஆண்டு. இந்தாண்டின் ராஜா மற்றும் சேனாதிபதி சூரியன் என்பதால், நிறைவான மழை பெய்யும்; நாடு செழிக்கும்,'' என்றார். *

சித்திரைக்கனி தரிசனம்

நேற்று முன்தினம், வீடுகளில் மா, பலா, வாழை மற்றும் பல்வேறு பழங்கள், தட்டுக்களில் அடுக்கி வைக்கப்பட்டது. அதன் அருகே கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது. வெற்றிலை - பாக்கு, நகைகள் மற்றும் ரூபாய் நோட்டுகள், நாணயங்களும் வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை துாங்கி எழுந்ததும், கனிகளை கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, குளித்து தயாராகி, தீபம் ஏற்றி வைத்து, மங்கள வாழ்த்து பாடல்களை பாடி வழிபட்டனர். ---சித்திரைக்கனியையொட்டி கண்ணாடி, பழங்கள் முன் தரிசனம் செய்த பக்தர்கள்.இடம்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு குருவாயூரப்பன் கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி