உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரிவிதிப்பு மேல் முறையீடு குழு கூடியது

வரிவிதிப்பு மேல் முறையீடு குழு கூடியது

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி விதிப்பு மேல் முறையீட்டு குழு மேயர் தலைமையில் செயல்படுகிறது. இதில், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.சொத்து வரி விதிப்பு உள்ளிட்ட வரி விதிப்புகளில் சொத்து உரிமையாளர்கள் தங்கள் வரி விதிப்பில் ஏதேனும் குறைகள் இருப்பின் அது குறித்து மேல் முறையீடு செய்யும் போது இக்குழு, அதன் மீது ஆய்வு மேற்கொண்டு தீர்வு ஏற்படுத்தும்.மாநகராட்சி பகுதியில், சொத்து வரி தொடர்பாகவும், சொத்துக்களின் மீதான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையிலும் நீண்ட காலமாக மாநகராட்சிக்கு வரியினங்களை செலுத்தாமல் நிலுவையில் சில வரி விதிப்புகள் உள்ளன.இதுபோன்ற நிலையில் நிலுவையில் உள்ள வரியினங்கள் வசூலிக்கவும், வழக்கு விவகாரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் மேல் முறையீட்டு குழு முன்னிலையில் இது குறித்த விவரங்கள் ஆய்வு செய்து, தீர்வு ஏற்படுத்தப்படும்.தற்போது நிலுவையில் உள்ள 27 வரி விதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் வகையில், இக்குழு கூட்டம் நடைபெற்றது.மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.குழு உறுப்பினர்களான கவுன்சிலர்கள், துணை கமிஷனர் சுந்தரராஜன், வருவாய் பிரிவு உதவி கமிஷனர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இரு நாட்களில் 27 வழக்குகள் விசாரிக்கப்பட்டன.வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், மாநகராட்சி நிர்வாகத்துக்கு இழப்பு இல்லாத வகையிலும், இவற்றின் மீது தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !