குழந்தைகளுக்கு ஆன்மிகத்தை கற்றுக்கொடுங்கள்
பல்லடம்; மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், ஆடி மாத கிருத்திகை வழிபாடு நேற்று நடந்தது. 'கலியுகத்தில் கந்தனின் மகிமை' என்ற தலைப்பில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி திருமடத்தை சேர்ந்த சுந்தரராச அடிகளார் பேசியதாவது: எந்த கோவிலுக்கு சென்றாலும் வெறும் கையுடன் செல்ல வேண்டாம். இறைவனின் அருள் கிடைக்க நாமும் கோவில் சேவைகளில் பங்கேற்க வேண்டும். அதனால்தான், 'நாள் என்ன செய்யும்; வினைதான் என்ன செய்யும் இறைவன் இருக்க' என்கின்றனர். குழந்தைகளுக்கு ஆன்மிகத்தை கற்றுக்கொடுங்கள். 'டிவி', மொபைல் போன், சினிமா என, இன்றைய தலைமுறை சிரழிந்து வருகிறது. சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளும் கையில் மொபைல் கொடுத்தால் சாப்பிடுகிறது. குழந்தைகளுக்கு மொ பைல் போன் பார்க்க நாம்தான் கற்றுத் தருகிறோம். எனவே, ஆன்மிகம் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். அப்போதுதான் குழந்தைகள் எதிர்காலத்தில் ஒழுக்கத்துடன், ஆன்மீக வழியிலும் அறவழியிலும் செல்வார்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. ஆன்மிக சொற்பொழிவை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தின் மீது முருகப்பெருமான் எழுந்தருளினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.