திருப்பூர்: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு தாள் - 1 தேர்வும், பி.எட்.முடித்த பட்டதாரிகளுக்கு தாள் - 2 தேர்வும் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தாள் ஒன்று தேர்வுக்கு, 2,671 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு இன்று காலை, 10:00மணி முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் (2:00 மணி வரை) அவகாசம் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நஞ்சப்பா, ஜெய்வாபாய், கே.எஸ்.சி. பழனியம்மாள், குமார்நகர், கணபதிபாளையம், இடுவம்பாளையம் ஆகிய ஏழு அரசு பள்ளி மையங்களில் தேர்வு நடக்கிறது. நாளை (16ம் தேதி) நஞ்சப்பா, கே.எஸ்.சி. பழனியம்மாள், பிஷப் உபகாரசாமி பள்ளியில் தலா இரு மையங்கள், ஜெய்வாபாய் பள்ளியில் மூன்று மையங்கள், விஜயாபுரம், அய்யங் காளிபாளையம், கணபதிபாளையம் அனுப்பர்பாளையம், கொங்கு வேளாளர், விகாஸ் வித்யாலயா, அவிநாசி பெண்கள் பள்ளி, சின்னச்சாமி அம்மாள் பள்ளி, எம்.என்.முருகப்ப செட்டியார், காந்தி வித்யாலயா உள்ளிட்ட, 23 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 2 நடக்கிறது; 6,871 பேர் தேர்வு எழுதுகின்றனர். இன்றும், நாளையும் நடக்கும் தேர்வை மாவட்டத்தில் மொத்தம், 9,542 பேர் எழுத உள்ளதால், தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்வு வாரியத்துடன் இணைந்து, மாவட்ட கல்வித்துறை முடுக்கி விட்டுள்ளது. நேற்று, தேர்வு மையம், தேர்வறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.