தொழில்நுட்ப பகிர்வால் வளர்ச்சிக்கு அச்சாரம்; இளம் தொழில் முனைவோரால் எல்லாம் சாத்தியம்
- நமது நிருபர் -'மத்திய அரசு, தொழில்நுட்ப பகிர்வு உள்ளிட்ட அனைத்து உதவி களையும் செய்ய தயாராக இருக்கிறது; இளைஞர்கள் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என, பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.'லகு உத்யோக் பாரதி' சார்பில், 'எம்.எஸ்.எம்.இ., சங்கமம் -2024' மாநாடு, கடந்த, 23ம் தேதி சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்த நிறுவனங்களுக்கு வழிகாட்டும் வகையில், மாநாடு நடத்தப்பட்டது.சீனா பிளஸ் 1' வியூகம், இறுக்குமதி வர்த்தகம், 'சிட்பி' உடனான கூட்டாண்மை, நுண்ணறிவு குழுவிவாதம், சோலார் தொழில்நுட்பம், நீர் சுத்திகரிப்பு முறைகள் என, பல்வேறு தலைப்புகளில் விரிவான கருத்தரங்கு நடந்தது.மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன், சோேஹா கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு உள்ளிட்டோர் பேசினர். லகு உத்யோக் பாரதியின் தேசிய செயலாளர் பிரகாஷ் சந்திரா, பொதுசெயலாளர் ஓம்பிரகாஷ் குப்தா, துணை பொதுசெயலாளர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.'எம்.எஸ்.எம்.இ., -சங்கமம்' மாநாட்டில் பங்கேற்றதன் மூலமாக, புதிய தெளிவு பிறந்துள்ளது. மத்திய அரசு, புதிய தொழில்துவங்க, தொழில்நுட்ப பகிர்வு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்ய தயாராக இருக்கிறது; இளைஞர்கள் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.கணேசன், எம்ப்ராய்டரிங் நிறுவன உரிமையாளர்:எம்.எஸ்.எம்.இ., சங்கமம் மாநாட்டில், குறுகிய அளவில் இருக்கும் தொழில்கள், அடுத்தகட்டத்துக்கு நகர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நல்ல இடம் என அதே இடத்தில் இருக்க கூடாது. ஏ.ஐ., மற்றும் 'இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்' தான் உலகத்தை ஆளப்போகிறது; அதை நோக்கி செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.ஸ்ரீதரன், 'லகு உத்யோக் பாரதி' மாவட்ட செயலாளர்:திருப்பூரில் இருந்து, 45 பேர் மாநாட்டில் பங்கேற்றோம்; 25 பேர், சி.எஸ்.ஐ.ஆர்., கூட்டத்தில் பங்கேற்றோம். இரண்டு ஆண்டுகளில், 900 தொழில்நுட்பங்களை தயாரித்து வைத்துள்ளனர்; அதை தொழில்துறைக்கு பயன்படுத்தலாம். தொழில் மந்தமாக இருக்கிறதா, அதை மேம்படுத்த என்ன செய்யலாம் என அறிவுரை வழங்கப்பட்டது.சாய ஆலைகளில் குவிந்துள்ள 'மிக்ஸ்டு சால்ட்'களை அகற்ற வழிகாட்ட வேண்டும். எம்பிராய்டரிங் கழிவுகளை, மறுசுழற்சிமுறையில் பயன்படுத்த வழிகாட்ட வேண்டுமெனவும் கேட்டுள்ளோம்.பாலகிருஷ்ணன், 'லகு உத்யோக் பாரதி' மாவட்ட தலைவர்:தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த் நாகேஸ்வரன், 'இந்தியாவில், 35 சதவீதம் குறு,சிறு தொழில்கள் பங்களிப்பு செய்கின்றன. தேவையான தொழில்நுட்பம், வழிகாட்டுதல் மற்றும் அரசு திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். அனைத்து அரசு திட்டங்களை பயன்படுத்தி தொழிலை மேம்படுத்த முன்வர வேண்டும்' என்றார்.'சீனா பிளஸ் 1' கோட்பாடு குறித்து ஸ்ரீதர்வேம்பு பேசுகையில்,'குறு, சிறு தொழில்கள், புதிய தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும்; உங்கள் திறமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான், போட்டியை வெற்றி கொள்ள முடியும். 'லகு உத்யோக் பாரதி' மூலமாக, 100 நாட்களில், புதிதாக 100 தொழில்கள் துவங்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம்.ராமன் அழகிய மணவாளன், பின்னலாடை தொழில் வழிகாட்டி ஆலோசகர் :தொழிலில் சாதித்தவர்கள் மூலமாக, நல்ல தகவல்கள் பகிரப்பட்டது. தனிநபராக முயற்சிப்பதை காட்டிலும், 'கிளஸ்டர்' அமைப்பாக முயற்சித்தால் வெற்றி பெறலாம். 'லகு உத்யோக் பாரதி' உதவியுடன், புதிய தொழில்நுட்பத்தை பெற்று பயன்பெறலாம். இதேபோல், திருப்பூர் எம்.எஸ்.எம்.இ., சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.சேகர், சாய ஆலை உரிமையாளர்:தோல் இன்ஸ்டிடியூட் சென்று பார்த்தோம்; சாய ஆலைகளில் குவிந்துள்ள உப்பை அகற்ற உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர். பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன்,, 'பெரிய நிறுவனங்கள், குறைந்தபட்ச முதலீட்டுடன் இயங்குவதாக தெரிவித்தார்; குறு, சிறு நிறுவனங்களுக்கான கட்டண தொகையையும் உரிய காலத்தில் வழங்குவதில்லை என்றும் தெரிவித்தார்.அதனால், 'நெகடிவ் கேபிடல்' இருக்கிறார்கள். இந்நிலை இருந்தால் வளர்ச்சி கிடைக்காது; வரன்முறைப்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. அரசு திட்டங்களை, தொழில்துறையினர் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.கோவிந்தராஜ், 'டைஸ் அண்ட் கெமிக்கல்':புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏற்கனவே தொழில்நடத்தி வருவோர், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிகாட்டும் மாநாடாகவும் இருந்தது. ஆய்வகம், தொழில்நுட்ப வழிகாட்டுதல் போன்றஉதவி எளிதாக கிடைக்கும்; புதிய தொழில்முனைவோர் அந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.செல்வராஜ், லைட்டிங் ேஷாரூம்:புதிய தொழில்முனைவோருக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்படுமென தெரிவித்துள்ளனர். பனியன் தொழில் உட்பட, அனைத்து வகையான தொழில்களுக்கும் உதவி செய்ய காத்திருக்கின்றனர். சரியான திட்டத்துடன் சென்றால், தேவையான வழிகாட்டுதலும், கடனுதவியும் கிடைக்கும்; இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள, இளைஞர்கள் முன்வர வேண்டும்.'அடுத்த 25 ஆண்டு இந்தியாவுக்கானது''லகு உத்யோக் பாரதி' சார்பில் நடந்த எம்.எஸ்.எம்.இ., சங்கமம் நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்துறையினர் பங்கேற்றனர். 'சீனா பிளஸ் 1', இறக்குமதிக்கான மாற்று குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது. அரசின் பொருளாதார ஆலோசகர் உட்பட, 13 நிபுணர்கள் பேசினர்முன்னணி நிறுவன அதிகாரி ஸ்ரீதர்வேம்பு பேசுகையில், 'இனிவரும், 25 ஆண்டுகள் இந்தியாவுக்கான ஆண்டாக இருக்கும். சீனாவுக்கு மாற்றாக, உற்பத்தி துறையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறும். அந்நாட்டில், அரசு மானியம் குறைக்கப்பட்டால் தொழில் சவாலாக மாறும். இளைஞர்கள் அதிகம் இருப்பதால், அடுத்து வரும், 25 ஆண்டுகள் இந்தியாவுக்கான ஆண்டாக அமையும்,' என்றார்.கோவை, திருப்பூர் மாவட்டங்கள் புதிய தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு மாற வேண்டும். தயாரிப்பு தனித்துவமாக இருந்தால், வெற்றி எளிதாகும். சி.எஸ்.ஐ.ஆர்., தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை, தொழில்முனைவோர்கள் சரிவர பயன்படுத்தி முன்னேறலாம். லகு உத்யோக் பாரதி தேவையான உதவிகளை வழங்க தயாராக இருக்கிறது.- மோகனசுந்தரம்'லகு உத்யோக் பாரதி' தேசிய இணை பொதுசெயலாளர்.