கலைத்திருவிழா இன்று துவங்குகிறது
திருப்பூர்: பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட கலைத்திருவிழா இன்று துவங்கி வரும், 6 ம் தேதி வரை நடத்தப்படுகிறது.செப். - அக். மாதம் பள்ளி மற்றும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. வட்டார அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு, மாவட்ட கலைத்திருவிழா இன்று முதல் வரும், 6ம் தேதி வரை பள்ளி கல்வித்துறையால் நடத்தப்படுகிறது. ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இன்று (4ம் தேதி) பிளஸ் 1, பிளஸ் 2 அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கும், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கும் மாவட்ட கலைத்திருவிழா நடக்கிறது. வரும், 5ம் தேதி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஜெய்வாபாய் பள்ளியிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ, மாணவியருக்கு நஞ்சப்பா பள்ளியிலும் கலைத்திருவிழா நடக்கிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 6ம் தேதி, நஞ்சப்பா பள்ளியில் மாவட்ட கலைத்திருவிழா நடக்கிறது, அதே நாளில், ஜெய்வாபாய் பள்ளியில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவியருக்கும் கலைத்திருவிழா நடக்கவுள்ளது. மாவட்ட கலைத்திருவிழாவில் பேச்சு, கட்டுரை, நடிப்பு, ஓவியம் வரைதல், குழு நடனம், தனிநபர் நடனம், கிராமிய இசை, இசைக்கருவி வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவியர் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.