பல்லாங்குழியான பாலத்தின் ஓடுதளம்; வாகன ஓட்டுநர்கள் அச்சம்
குடிமங்கலம்; உடுமலை அருகே, தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், உயர் மட்ட பாலத்தின் ஓடுதளம் சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடக்க வேண்டியுள்ளது.பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், பெதப்பம்பட்டி அருகே, உப்பாறு ஓடை குறுக்கிடுகிறது. இந்த ஓடையின் குறுக்கே, கடந்த, 2019ல் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.கரூர், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கனரக வாகனங்கள், பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்ல இந்த ரோட்டை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், பெதப்பம்பட்டி உயர் மட்ட பாலத்தில், ஓடுதளம் அடிக்கடி சேதமடைந்து, அருகருகே பள்ளமாக மாறுகிறது.அதில், கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில், பாலத்தை கடக்கும் போது விபத்துக்குள்ளாகின்றனர். கனரக வாகன ஓட்டுநர்களும் அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது.நெடுஞ்சாலைத்துறையினர் பிரதான ரோட்டிலுள்ள பாலத்தின் ஓடுதளத்தை, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.