செயல் இழந்த உழவன் செயலி
திருப்பூர்: விவசாயிகள் பயன் பெறும் வகையில், தமிழக அரசின் வேளாண் துறை சார்பில், 'உழவன்' மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மானிய திட்டங்கள், பயிர்க் காப்பீடு, விளைபொருட்கள் விலை நிலவரம், வானிலை நிலவரம், உரம், விதை போன்றவற்றை பெற பதிவு செய்தல், கூட்டுறவு சங்கம், வேளாண் பொறியியல் துறை சார்பில் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் கருவி மற்றும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு பெற பதிவு செய்தல் போன்ற பல்வேறு சேவைகள் இதன் வாயிலாகப் பெற முடியும். இதில் பயன் பெறும் விவசாயிகள் தங்கள் மொபைல் போனில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களைப் பற்றிய சுய விவரங்களை அதில் பதிவேற்றம் செய்து அதைப் பயன்படுத்தலாம். அவ்வகையில் இதை ஏராளமான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த செயலி தற்போது முறையாகச் செயல்படாமல் உள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். திருப்பூரைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: உழவன் செயலியில் வேளாண் பணிகளுக்கு பயன்படுத்த இயந்திரங்கள் பதிவு செய்ய முயற்சி செய்து வருகிறோம். ஆனால், இந்த வேண்டுகோளை இச்செயலி ஏற்பதில்லை. இந்த நிலை கடந்த ஒரு வாரமாக நீடிக்கிறது. வேளாண் துறையில் இந்த கருவிகளை வாங்கி வைத்திருந்தாலும், அவற்றை இயக்க உரிய ஊழியர்கள் இல்லாத நிலை உள்ளது. இதனால், அவற்றை வாடகைக்கு விட முடியாமல் இந்த செயலியில் அந்த சேவையைப் பெற முடியாமல் செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து, வேளாண் துறையினரிடம் கேட்டதற்கு, 'தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலி சில சமயங்களில் ேஹங் ஆகியிருக்கலாம். மற்றபடி குறிப்பிட்ட சேவையை மட்டும் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைக்கு வாய்ப்பில்லை,' என்றனர்.