உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மேம்பாலமே நெரிசலுக்கு தீர்வு

மேம்பாலமே நெரிசலுக்கு தீர்வு

பல்லடம்; உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதால் மட்டுமே பல்லடத்தின் போக்கு வரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என, பல்லடம் நுகர்வோர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் மணிக்குமார் கூறியதாவது: பல்லடம் தாலுகாவின் கீழ் இருந்த திருப்பூர் தான் இன்று, மாவட்டமாகவும் மாநகராட்சியாகவும் தரம் உயர்ந்துள்ளது. ஆனால், தாலுகாவாக உள்ள பல்லடம், இன்றும் அதே நிலையில் தான் உள்ளது. குறிப்பாக, கடந்த, 15 ஆண்டுகளாகவே, பல்லடத்தில் போக்குவரத்து பிரச்னை நீடித்து வருகிறது. பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடமாக பல்லடம் உள்ளதே இதற்குக் காரணம். எண்ணற்ற உயிரிழப்புகள், வாகன விபத்துகள் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவியாய் தவிப்பதும், பல்லடத்தின் தலைவிதியாக உள்ளது. பல்லடத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் அறிவிக்கப்பட்ட புறவழிச்சாலை திட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர். இதன் காரணமாக, புறவழிச்சாலை திட்டம் வருவதும் கேள்விக்குறியாகி விட்டது. இதே நிலை நீடித்தால், மேலும், பல ஆண்டுகளுக்கு, போக்குவரத்து திட்டங்கள் நிறைவேற்றப்படாது என்றே கருதுகிறோம். எனவே, பல்லடம் நகரப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை, பொள்ளாச்சி அவிநாசி மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதன் மூலமாக மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும். பல்வேறு அரசியல் கட்சியினரும் இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே, புறவழிச்சாலை திட்டங்கள் கிடப்பில் இருக்க, பல்லடத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ள இக்கோரிக்கை மனு, முதல்வர் தனிப்பிரிவுக்கும் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை