மானியத்தில் தேங்காய் பறிக்கும் கருவி, பயிற்சி வழங்கணும்
உடுமலை : தென்னை வளர்ச்சி வாரியத்தின் வாயிலாக, தேங்காய் பறிக்கும் கருவியை மானியத்தில் ஒதுக்கி, பயிற்சியளிக்கவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. சராசரியாக 35 - 45 நாட்களுக்கு ஒரு முறை தென்னை மரத்திலிருந்து தேங்காய் பறிக்கப்பட வேண்டும். சிலர் மரத்திலிருந்து இளநீரையும் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில், ஆண்டுதோறும் சாகுபடி பரப்பு அதிகரித்தும், தேங்காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையத்துவங்கியது.தேங்காய் பறிக்கும் தொழிலாளர்கள், அதிகளவு தென்னை மரங்களில் காய் பறிக்க, மரங்களில் ஏறாமல், நீளமான குச்சி பயன்படுத்தும் நடைமுறையை பின்பற்றினர். இருப்பினும், தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க முடியவில்லை.இப்பிரச்னைக்கு தீர்வு காண தென்னை வளர்ச்சி வாரியத்தால், அங்கீகரிக்கப்பட்ட கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.இந்த கருவியின் பயன்பாட்டை அதிகரித்து, தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க, தென்னை வளர்ச்சி வாரியம், நாடு முழுவதும், விவசாயிகளுக்கு பயிற்சியும் வழங்கினர். இந்த பயிற்சி பெற்றவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவி மானியமாகவும் அளிக்கப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. மீண்டும் உடுமலை வட்டாரத்தில், இந்த பயிற்சியை செயல்படுத்தி, மானியத்தில் கருவியும், பயிற்சியும் வழங்க தென்னை வளர்ச்சி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.