உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தனி மனித ஒழுக்கத்துக்கு வழிகாட்டும் கம்பராமாயணம்

தனி மனித ஒழுக்கத்துக்கு வழிகாட்டும் கம்பராமாயணம்

திருப்பூர்; ''கம்பராமாயணமும், வள்ளுவமும், தனிமனித ஒழுக்கத்துக்கும், சமூக ஒழுக்கத்துக்கும் வழிகாட்டிகள்,'' என, பட்டி மன்ற நடுவர் பாரதி பாஸ்கர் பேசினார். திருப்பூர் கம்பன் கழகம் சார்பில், 'கம்பன் புகழ்பாடி கன்னித்தமிழ் வளர்ப்போம்' என்ற தலைப்பபில், 'கம்பன் விழா -2025' ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. ஆசிரியர் சந்தியா தலைமையிலான, திருப்பூர் சாய் கிருஷ்ணா கலைப்பள்ளி குழுவினரின், ராமாயண நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். தமிழ்நாடு நுாற்பாலைகள் சங்க தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். அயராத தமிழ்ப்பணிக்காக பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு, 'வாகீச கலைவாணி' என்ற விருதை கம்பன் கழக தலைவர் ராம்ராஜ் காட்டன் நாகராஜன் வழங்கினார். பொருளாளர் சிவராம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். கம்பன் விழா சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. பாரதி பாஸ்கர் நடுவராக இருந்த, 'கம்பன் காவியத்தில் எந்தத்தம்பி தங்கக்கம்பி' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. 'லட்சுமணனே' என்ற அணியில், புதுகை பாரதி, கோவை ஞானாம்பிகா; 'பரதனே' என்ற அணியில், மதுரை ரேவதி சுப்புலட்சுமி, சென்னை தெய்வானை; 'கும்பகர்ணனே' என்ற அணியில், ராஜபாளையம் கவிதா ஜவஹர், ஆடிட்டர் தெய்வநாயகி ஆகியோர் பேசினர். நடுவர் பாரதி பாஸ்கர் பேசுகையில், ''சேவையை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காகவே விருதுகள் வழங்கப்படுகிறது; அதை உணர்ந்து பொறுப்பை சிறப்பாக செயல்படுத்துவேன். 'கம்பராமாயணத்தை படித்தால், செல்ல வேண்டிய இடத்தை தாண்டியும் கம்பன் அழைத்துச்செல்வான்' என்று பலரும் கூறியுள்ளனர். இலக்கிய இன்பத்துக்காக கம்பராமாயணத்தை படிப்பதில்லை; தனிமனித ஒழுக்கத்தை கற்க படிக்க வேண்டும். கம்பராமாயணமும், வள்ளுவமும், தனிமனித ஒழுக்கத்துக்கும், சமூக ஒழுக்கத்துக்கும் வழிகாட்டிகள். எத்தகைய சோதனை வந்தாலும், நேர்மை தவறாமல் வாழ வேண்டுமென வழிகாட்டும் மாபெரும் இலக்கியங்கள்,''என்றார். துணை செயலாளர் கவுசல்யா நன்றி கூறினார். முன்னதாக, புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில், திருப்பூர் கம்பன் கழக தலைவர் நாகராஜனுக்கு, 'கம்பன் மாமணி' என்ற விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ