தடகளத்தில் வெல்ல தாரக மந்திரம்
''ஓட்டத்தில் வேகம் - வேகம் - மிக வேகம் இருக்க வேண்டும்; வேகம், நுணுக்கம் குறைந்தால், வெற்றி கிடைக்காது'' என்கிறார், தேசிய தடகளத்தில் சாதித்த பவீனா, 19.திருப்பூர், முத்தணம்பாளையத்தை சேர்ந்தவர், பவீனா; காங்கயம் ரோடு, செயின்ட் ஜோசப்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து, தற்போது, உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில், பி.பி.ஏ., (சி.ஏ.,) இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.கடந்த, 22 முதல், 24ம் தேதி வரை, உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில், அத்தலெக்டிக் பெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய, 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய தடகள போட்டியில், வெள்ளி பதக்கம் பெற்று, தமிழகத்துக்கு பெருமை தேடி தந்துள்ளார்.இதற்கு முன் சென்னை, கோவை, கர்நாடக மாநிலம் உடுப்பி, மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூரில் நடந்த தேசிய போட்டியில் முதலிரண்டு இடங்களை பெற்ற இவர், விளையாட்டு அமைச்சகம் நடத்தும் 'கேலோ இந்தியா' போட்டியிலும், முதலிடம் பெற்று பாராட்டுகளை பெற்றுள்ளார். எந்த நேரமும் மைதானத்தில் பயிற்சியே பவீனாவின் பலம் என்றால் மிகையாகாது.பவீனா, நம்மிடம் பகிர்ந்தவை:ஆறாம் வகுப்பில் தடகளப்போட்டியில் ஆர்வம் வந்தது. முதலில், 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தான் கவனம் செலுத்தினேன். எட்டாம் வகுப்பில், உலக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று கிடைத்த மகிழ்ச்சி அடுத்தடுத்த போட்டிகளுக்கு உத்வேகமாக அமைந்தது. மாவட்ட தடகள போட்டிகளில் எனது செயல்பாடுகளை பார்த்த, ஈரோடு மாவட்ட தடகள பயிற்றுனர் திவ்ய நாகேஸ்வரி, மும்முனை தாண்டுதலில் கவனம் செலுத்த, அறிவுரை வழங்கி, பயிற்சி அளித்தார். பயிற்சியேவெற்றிக்கு பேருதவி
உடுமலையில் கல்லுாரி, திருப்பூரில் வீடு என்றாலும், ஈரோட்டில் தங்கி, தடகள பயிற்சி பெற்றேன். துவக்கத்தில் கால்கள் இடறினாலும், தொடர் பயிற்சியால் 'பிக்-அப்' கிடைத்தது. மாநில போட்டிக்கு செல்லும் போது போட்டியாளர்களை பார்த்தாலே ஒருவித தயக்கம் இருக்கும். ஆனால், எனக்கான இலக்கை நோக்கி பயணிக்க தவற மாட்டேன். பயிற்சி முகாம்கள் தான் வெற்றிக்கு பேருதவியாக இருந்தன. வியூகம் வகுத்ததுதப்பவில்லை
தடகள வீரர்கள் பயிற்சி முகாம்களில் தவறாமல் பங்கேற்றால் தான், களத்தில் சாதிக்க முடியும்; ஓட்டத்தில் வேகம் - வேகம் - மிக வேகம் இருக்க வேண்டும்; வேகம், நுணுக்கம் குறைந்தால், வெற்றி கிடைக்காது. பல்வேறு இடர்பாடுகளை கடந்து தான் தேசிய போட்டிக்கு சென்றேன்.தடகள வீராங்கனைகளுக்கு நேர தவறாமை கோட்பாடாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தேசிய போட்டியிலும் பயிற்சியாளர் வகுத்துக் கொடுத்த வியூகம் தான் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. தடகள போட்டியில் தமிழகம் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்பது என் குறிக்கோள். இவ்வாறு அவர் கூறினார்.ஜெர்மன் போட்டியில்பங்கேற்க வாய்ப்புகடந்த மே மாதம், ஒடிசாவிலுள்ள கலிங்கா பல்கலையில், உலக பல்கலைக்கழக தடகள வீரர்களுக்கான தடகளத் தேர்வு போட்டி நடந்தது. இதில், கோவை, பாரதியார் பல்கலை சார்பில் பங்கேற்று தேர்வான பவீனா, ஜூலை மாதம், 16 முதல், 27 வரை ஜெர்மனியில் நடைபெற உள்ள உலக பல்கலை ஜூனியர் தடகள போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். பவீனாவின் தங்கை, சாருநிதா, ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். மண்டல அளவிலான தடகள போட்டியில்,80 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் அசத்தி, முதலி டம் பெற்று, தங்கம் வென்றுள்ளார். பவீனாவின் தந்தை ராஜேஷ்; தாய் சத்யபிரியா.