எல்லை மாறிய குப்பையால் வந்த தொல்லை
திருப்பூர் மாநகராட்சியில் தினமும், 800 டன் குப்பை கழிவுகள் சேகரமாகிறது. இவை, ஆங்காங்கே உள்ள பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்த நிலையில், அருகில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்னையால், குப்பை கழிவுகள் அந்தந்த வார்டு பகுதியிலேயே கொண்டு சென்று கொட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில், 17வது வார்டில் கஞ்சம்பாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது, 19வது வார்டு பகுதியிலிருந்து கொண்டு வரும் குப்பையும் இந்த இடத்தில் குவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்த வார்டு கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு இதேபோல், மாநகராட்சி, 46வது வார்டு பகுதியில், சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டு வரும் பகுதியில் தற்போது குப்பைகழிவுகள் கொண்டு சென்று கொட்டப்பட்டு வருகிறது. இதனால், எழும் துர்நாற்றமும், காற்றில் பறந்து செல்லும் குப்பை கழிவுகளும் அருகேயுள்ள குடியிருப்பு வாசிகளை அவதிப்படுத்தி வருகிறது. நேற்று காலை அங்கு திரண்ட பொதுமக்கள் குப்பை கொட்டக் கூடாது என வலியுறுத்தினர். இதனையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் குப்பையை கொட்ட மாநகராட்சி அலுவலர்கள் திட்டமிட்டனர். இதற்கு பா.ஜ., நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, 'கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் குப்பை கழிவுகளைக் கொட்ட அனுமதிக்க கூடாது. அவ்வாறு கொட்டினால், போராட்டம் நடத்தப்படும்,' என்று கூறினர். மறியல் செய்வோம் எங்கள் வார்டில் சேகரமாகும் குப்பையையே கையாள முடியாத நிலை உள்ளது. தற்போது, 19வது வார்டிலிருந்தும் குப்பை கொண்டு வந்துள்ளனர். எங்கள் பகுதியில் மற்றொரு வார்டின் குப்பையை கொட்டக்கூடாது என, மேயர், கமிஷனர், மண்டல குழு தலைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இது தொடர்ந்தால், மக்களைத் திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும். - செழியன் (த.மா.கா.,) 17வது வார்டு கவுன்சிலர்