எகிறும் பீன்ஸ் விலை வரத்து குறைந்தது
உடுமலை : வரத்து குறைவால் உழவர் சந்தையில் பீன்ஸ் உள்ளிட்ட காய்களின் விலை அதிகரித்து விற்பனையானது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும், காய்கறி சாகுபடியும் அதிக அளவில் நடக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை, உடுமலை உழவர்சந்தைக்கு கொண்டு செல்கின்றனர்.அவ்வகையில், உடுமலை உழவர் சந்தைக்கு சுற்றுப்பகுதிகளில் இருந்து நாள்தோறும் பல டன் காய்கறி வரத்து உள்ளது. குறிப்பாக, தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய் மற்றும் கீரை வகைகள் அதிகளவு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.கடந்த சில நாட்களாக, கிராமங்களில் இருந்து பீன்ஸ் வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. தொடர் மழையால், உற்பத்தி பாதித்தது இதற்கு காரணமாகும். நேற்று உழவர் சந்தையில், பீன்ஸ் கிலோ, 70-80 ரூபாய் வரை விற்பனையானது.இதே போல், அவரைக்காய், 60 - 70; கேரட், 90 - 100 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சின்னவெங்காயம், 50 - 70; பெரியவெங்காயம், 50 - 75, பச்சை மிளகாய், 25 - 30 ரூபாய் என்றளவில் விற்பனையானது.தொடர் மழையால், காய்கறி உற்பத்தி பாதித்து, சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது; விரைவில் வரத்து சீராகும் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.காய்கறிகளின் விலை உயர்வால், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.