காற்றுக்கு சாய்ந்த மரம் பொதுமக்களே அகற்றினர்
திருப்பூர்: வி.ஜி.வி., லே அவுட் பகுதியில், காற்றுக்கு முறிந்த மரத்தை பொதுமக்கள் அப்புறப்படுத்தினர்.திருப்பூர் மாநகராட்சி 49 வது வார்டுக்கு உட்பட்ட ஜெய் நகர் பகுதியிலிருந்து வி.ஜி.வி., கார்டன் செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த வழியில் பல இடங்களிலும் ரோட்டோரத்தில் மரங்கள் வளர்ந்துள்ளன. நேற்று காலை அப்பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசியது.இதில் அந்த வீதியில் இருந்த 25 ஆண்டு வயதுடைய வேப்ப மரம் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வேரோடு முறிந்து ரோட்டில் விழுந்தது. இந்த இடத்தில் சில நொடிகள் முன்னதாக ஒரு கார் கடந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக அந்த கார் இதிலிருந்து தப்பியது.வேரோடு முறிந்து ரோட்டில் குறுக்கில் விழுந்த மரத்தால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு அவதி நிலவியது. அப்பகுதி மக்கள் ஒன்று கூடி மரத்தை அகற்றி ரோட்டின் ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறின்றி நகர்த்தி வைத்தனர்.