உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழை ஓயவில்லை; பயணத்திற்கும் ஓய்வில்லை

மழை ஓயவில்லை; பயணத்திற்கும் ஓய்வில்லை

திருப்பூர்; நாள் முழுதும் மழை தொடர்ந்தபோதும், திருப்பூரில் நனைந்தபடி மக்கள் வாகனங்களில் பயணத்தைத் தொடர்ந்தனர்; மாணவர்கள் சிரமப்பட்டனர்.தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தமிழகத்தை நெருங்குவதையடுத்து, பல்வேறு மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று, திருப்பூர் நகரம், அவிநாசி, பல்லடம், காங்கயம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. திருப்பூர் நகர பகுதிகளில் காலை, 5:00 மணி முதலே துாறல் மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது.மழை வாய்ப்புள்ள மாவட்டங்களில் திருப்பூர் இடம்பெற்றிருந்தது. மாணவர்கள் பள்ளிக்கு புறப்படும் நேரத்திலும் விடாமல் மழை பெய்துகொண்டிருந்தது. நேற்று, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியர், குடைகளை பிடித்தவாறும், மழையில் நனைந்தபடியே பள்ளிகளுக்கு செல்லவேண்டியிருந்தது. பெற்றோருடன் டூவீலரில் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவியர், மழையில் முழுவதும் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர்; சீருடை, புத்தகப் பைகளும் நனைந்ததால் சிரமப்பட்டனர்.ஐந்து நிமிடங்கள் சிறு துாறலாகவும், மீண்டும் பலத்த மழை என, மாறி மாறி மதியம் 2:00 மணி வரையும் மழை பெய்தது. மாலை வேளையில் மீண்டும் மழை பெய்தது.நேற்று முழுவதும் மழை நாளாக இருந்தபோதிலும், நனைந்தபடியே வாகனங்களில் பலரும் பயணித்தவாறே தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.மாலையில் பணி முடித்துவிட்டு தொழிலாளர்கள் வேகமாக வீடு திரும்பினர். கடைகளிலும் வழக்கத்தைவிட வாடிக்கையாளர் கூட்டம் குறைவாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ